Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

வரலாற்றுக் காப்பியம்
ஏ. கே. வேலன்


 



வரலாற்றுக் காப்பியம்

ச ங் க கா ல ம்

(முதல் பகுதி)

எழுத்து ஏ கே வேலன்

V S K வெளியீடு

24, அருணாசலம் சாலை, சென்னை-93.

எமது வெளியீடுகள்!

1 கண்ணன் கருணை ரூ. 1.50

2 மேரியின் திருமகன் 1.50

3 காவியக் கம்பன் 3-00

4 மீனாட்சி நாடகத் தமிழ் 3-00

தபாற் செலவு தனி

வாணிபக் கழிவு 25%

உள்ளடக்கம்

வாழிய தமிழ்

லெமூரியா

உயிர்க்குலம்

ஆதிமனிதனுக்குத் தொட்டில்

நெற்றிக்கண்

குமரிக்கண்டம்

நானிலம்

நாவலன் தீவு

எண்ணும் எழுத்தும்

யாழ் பிறந்தது

உணவும் உணர்வும்

செந்தமிழ்ச் சுவடு

சிந்துவெளிப் புதையல்

ஆரியவர்த்தம்

தண்டகவனம்

இராவணலங்கை

வடக்கும் தெற்கும்

பரசுராம பூமி

தலைச் சங்க நாட்கள்

சங்கத் தமிழ்

செங்கோன் தரைச் செலவு

தலைச்சங்கப் பாடல்கள்

சரித்திரக் கணக்கு

பின்னுரை

பிழைத் திருத்தம்

வாழிய தமிழ்

வரலாற்றுக் காப்பியம் :

சங்க காலம் :

முன்மொழி :

பொன்மால் இமயத்தில் புலிபொறித்த போர்க் குலமே

வடவர் வேரறுத்த தென்பாண்டி மறக்குலமே

இமயத்தில் வில்லெழுதிய சேரன் குலத்தோன்றலே

உன்னை நீயறிய உலகம் உன்னைத் தெரிய

முன்னைச் சேதிகளைத் தொகுத்து உரைக்கின்றேன்.

பொன்னி பொங்கிவர பொருணை ஆடிவர

பெண்ணை பெருகிவர வைகை நகர்ந்துவர

தென்றலசைந்து வரும் செந்தமிழ் நாடுடையாய்

வங்கக் கடலலையும் உன் வல்லமையே பாடுதடா

வான் நிமிர்ந்த, கோபுரங்கள் உன் வரலாற்றின் படிக்கட்டே

கல்வெட்டும் செப்பேடும் தமிழணங்கின் காற்சிலம்பே.

வரிப்புலியின் குருளைகளே மதகரியின் கன்றுகளே

வில்லேருழவர்கள் தங்கள் வீரகாவியங்களை

மாற்றார் நெஞ்சத்தில் ஈட்டிகொண்டு எழுதினார்

சொல்லேருழவன் ஏகே வேலன் முன்னை

வரலாற்றைக் காப்பியமாய்த் தருகின்றான்.

வாழியரோ!

லெமூரியா

பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை என்று

பாரதி சொன்னான் ஆயினும் என்னால்

கடல் கொண்ட தென்புலத்தை மறப்பதற்கு இல்லை

மண்ணியலார் சொல்லுகின்ற வரலாற்றின் படிக்கு,

இன்று இந்து மாக்கடலாக இருக்கின்ற

நீர்ப்பரப்பே நிலப்பரப்பாக இருந்தது ஒருநாள்

இமயமென்னும் நெடுவரையும் அன்றில்லை

சிந்து கங்கை சமவெளியும் தோன்றவில்லை

ரஜப்புதன பாலை நிலம் ஓருபெருங்கடலே

மேற்கே மோரீசுக்கு அப்பாலும் நீண்டு

கிழக்கில் சாவகம் சுமத்திரையைத் தாண்டி

வடக்கில் விந்தியம் வரம்பாக

தெற்கில் தென்பாலி நிலங்கடந்து

விரிந்து கிடந்த பெருநாடே லெமூரியா

உயிர்க்குலம்

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பர்

குரங்குக்கும் மனிதனுக்குமிடையில்

லெமூர் என்றதொரு நிலை உண்டென்று

விலங்கியலார் தெளிவுபட விளக்குகின்றார்.

டார்வின் எனும் சான்றோனின் கொள்கைக்குச் சான்று

புல்லாகிப் பூடாகி புழுவாய் மரமாகி

பறவையாய்ப் பாம்பாகி பல்விருகமாகி

மனிதராய்த் தேவராய் வளர்ந்து வளர்ந்து

செல்லா நின்ற தாவர சங்கம மென்று

உயிரின வளர்ச்சியை உரைக்கின்றது மணிவாசகம்

நீரினத்தில் மீனாகி நீரிலும் நிலத்திலும்

வாழும் விலங்கினத்தில் ஆமையாகி

குறுக்கில் வளர்ந்து குளம்புள்ள இனமாக

குட்டியிட்டுப் பால்கொடுத்த வளர்ச்சியே பன்றி

மிருகமே மனிதன் ஆன கதைக்கு

விளக்கமே நரசிம்மக் கோலம்

ஆதிமனிதன் மிகவும் குள்ளன்

என்ற கணக்கே வாமனம் மற்றபடி

அவன் நெடிய வளர்ச்சியே திருவிக்கிரமம்

காட்டு மனிதனுக்கு சாட்சியம் பரசுராமன்

அழகுக்கும் ஆற்றலுக்கும் தசரதராமன்

அறிவுக்கும் அரசியலுக்கும் கோகுலக் கண்ணன்

மனிதனும் மிருகமாவான் என்பதை

எடுத்துக் காட்ட ஒரு பிறப்பு அசுவத்தாமன்

பகைக்குலத்தை வேரறுக்க வழிவகுத்தான் கண்ணன்

பாண்டவ திருக்குலத்தைக் கருவறுத்தான் அசுவத்தாமன்

இரண்டும் பூபாரம் தீர்த்த புண்ணியமே

ஆக அவதாரம் பத்தும் ஆயிற்று ஆயிற்று

பத்தாவது பிறப்பு இனிமேல் எடுப்பது என்பார்

கல்கி புராண கதையின் படிக்கு

கலியின் பிறப்போடு கல்கியும் பிறந்து போனான்

அவனுக்கு ஆசான் பரசுராமன் என்பதால்

முன்னேயுகத்துக்கு முன்னவனான பரசுராமன்

பின்னையுகத்துக்குப் பின்னாலும் பிறந்து வருவனோ

புராணயுகமே போயிற்று போயிற்று

கல்கிக்குக் குதிரைவடிவம் கற்பித்துள்ள படியால்

அசுவத்தாமனே அந்த அவதாரமாவான்

ஆக உயிர்க்குலத்து வளர்ச்சியை

புராணவழியில் புகலுவதே தசாவதாரம்.

ஆதிமனிதனுக்குத் தொட்டில்

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதே

வரலாற்றுப் புலவர்களின் வலிய கொள்கை

அவன் ஆதியில் பிறந்தது சீனத்து பீக்கின்

அடுத்த வளர்ச்சி சாவக மனிதன்

தாவத்தெரிந்திருந்தான் வாலுண்டு

மனித குரங்கென்ற மறுமலர்ச்சி இதுவே

பிரிட்டானிய பில்டனில் மேலும் வளர்ந்தான்

நாலுகாலமைப்பில் ஒரு மாற்றம் நேர்ந்தது

காலிரண்டு கொண்டு ஊன்றினான்

முன்னங்காலிரண்டுமே கைகளாயிற்று

அடுத்து ஹெய்டனில் நிமிர்ந்து நடந்தான்

ஐந்து விரலும் ஒரு வழி அமைப்பாக

இன்றும் குரக்கினத்துக்கு இருப்பது போன்ற

நிலையில் திரிந்து பெருவிரல் தனித்து

இயங்கத் தெரிந்த மாற்றமே நின்டேர்தல்

கூட்டு வாழ்க்கை கொண்டு நடத்திய

மந்தி குலமே குரோமக்நன்

இந்த ஆறு நிலையும் கடந்த வளர்ச்சியை

உயிரியலார் ஆதி லெமூர் என்று அறுதியிட்டார்

உற்றறிவது உண்டு சுவைப்பது

மோந்து நுகர்வது கண்டு களிப்பது

கேட்டு மகிழ்வது என்றவகை ஐந்தறிவும்

கொண்டு விளங்கிற்று அந்த முன்னைக்குலம்

மேலும் மிருக வடிவிலிருந்து மேம்பட்டு

மனமென்னும் உணர்வு கொண்ட மாற்றமே

மனிதனாக்கிற்று லெமூரியன் ஆனான்

அவனே மனுக்குலத்துக்கு மூதாதை

தமிழ்க் குலத்துக்குத் தந்தை என்று தலை நிமிர்கின்றேன்.

யூதேயா நாட்டு ஏதேன் பூங்காவில்

ஆதாம் என்றவனை ஆண்டவன் படைத்தான்

அவன் எலும்பிலிருந்தே பெண்ணும் பிறந்தாள்

என்பது உயிரியல் இலக்கணத்துக்கு புறம்பானது

அறிவில் வளர்ந்து வடிவிலும் படிப்படியே

குரங்கிலிருந்து மனிதன் ஆன கொள்கையே வலியது

ஆக மனுக்குலத்தின் தலைமகன் லெமூரியன்.

லெமூரியனைக் கொண்டு பெயர் கொண்டதே லெமூரியா

அந்த ஆதிமனிதனுக்குத் தொட்டில்

மூன்றாவது ஊழியில் மூழ்கிய நம்தென் புலமே

நெற்றிக்கண்

பஃறுளி ஆற்று பழய லெமூரியனை

கல்தோன்றி மண்ணும் தோன்று முன்னே

பிறந்ததொரு பழங்குடி என்று சொன்னார்

இமயத்தைக் கல்லென்றும் இந்து வெளியை மண்என்றும்

சொல்லுவது நம் இலக்கிய மரபு

பண்ணுறத் தமிழாய்ந்த அந்த பழய மகன்

கண்ணுதலில் பெற்றிருந்த கதையுமுண்டு

முன்னை லெமூரியன் கொண்டிருந்த உடலமைப்பில்

இருபுருவத்துக்கும் இடையில் சிறிது மேடாக

வாதுமை வடிவில் புடைத்தெழுந்த நுண் நரம்பு

அகத்துக்கண் ஆனது நெற்றிக்கண் என்றார்

ஐந்து பெரிய அறிவும் தாண்டி

ஆறாவது ஆன மனத்துக்கும் மேலாக

ஒளிகொண்டு ஞானக் கண்ணாக செயற்பட்டது

அ.இ. என்னும் புறச்சுட்டு இரண்டும்

அருகிலும் தொலைவிலும் உள்ளதை அறிவுறுத்தும்

'உ' என்னும் அகச்சுட்டு கண்கொண்டு காணாததை

மனத்துக் கண் கொண்டு காண்பதையும் சுட்டும்

அவ்வாறு தொழிற்பட்ட நெற்றிமேடே நெற்றிக்கண்

புறத்திரண்டு கண்ணோடும் நெற்றிமேட்டை

மூன்றாவதாக எண்ணினார் முக்கண் என்றார்

முன்னை இவரின் பழந்தெய் வங்களூக்கு

முகங்கள் எத்துணை வைத்தாலும்

மூன்று கண்ணும் வைத்தார்.

இந்த மண்ணின் தெங்குக்கும் மூன்று கண்ணுண்டு

அவர் அறிவை வகைப்படுத்திய நுட்பம் பெரிது

ஒன்றாம் அறிவென்பது உற்றறிவது ஆகும்

புல்பூண்டு மரஞ்செடி அந்த வகைப் படும்

சுவைக்கத் தெரிவது இரண்டாம் அறிவு

நந்தும் சங்கும் அந்தவகைப்படும்

நுகரத் தெரிவது மூன்றாம் அறிவு

எறும்புக்கும் சிதலுக்கும் இத்திறன் உண்டு

காணுகின்ற திறனே நான்காம் அறிவு

நண்டுக்கும் தும்பிக்கும் கண்கள் பெரிது

கேட்கின்ற திறனே ஐந்தாவது அறிவு

பாம்பும் பறவையும் மிருகமும் இனப்படும்

மனத்தை ஆறாவது அறிவென்றார் ஆன்றோர்

புலன்வழிச் சென்று பொருளியல் உணர்ந்து

சிந்தனைப் படுவதே அதற்குரிய சிறப்பு

பகுத்தறிவு என்று பகர்ந்தனர் இன்று

புறத்திருக்கும் ஊனக்கண் இரண்டுமே உறங்கும்போது

உறங்காது செயற்படும் ஞானக்கண்

யோகத்தால் அதுவளரும் சுழிமுனை என்றார்

காலவெள்ளத்தில் உடலியல் மாற்றத்தில்

லெமூரியன் நெற்றி மேடிழந்தான்

நெற்றித்திலகமாக நிகழ்த்துகின்றர் இன்றும்

முக்கண்டி காடுவெட்டி என்னும்

திரிலோசனப் பல்லவனுக்கு மூன்றுகண்

காவிரிக்கு கரை எடுக்க வர மறுத்தான்

என்பதால் கரிகாலன் அவன் மூன்றாங்கண்ணைப்

பறித்தானென்று பகரும் கலிங்கத்துப் பரணி.

குமரிக்கண்டம்

பூசம் முதலாக புளர்ப் பூசம் ஈறாக

எண்ணுகின்ற இருபத்தேழு நட்சத்திரங்களும்

சூரிய சந்திரரை உள்ளிட்டு சனிவரை

சொல்லுகின்ற ஏழு கோள்களும்

சுழன்று கொண்டு இருப்பதே இந்த பேரண்டம்

சூரியனிலிருந்து புறப்படும் சுடரொளி

பூமியை வந்து தொட ஐநூற்று வினாடி

வினாடிக்கு அதன்வேகம் லட்சத்து எண்பத்து

ஆறாயிரம் மைல் என்று அறுதியிட்டார்

பூமிக்கும் சூரியனுக்கும் இடையிட்ட தூரமோ

கோடியில் ஒன்பதும் லட்சத்தில் முப்பதும்

சுருதிகள் சொல்லுகின்ற சுழலும் கணக்கிற்கு

சூரிய சந்திர கிரகணமே சான்று

புவிக்குரிய அச்சின் மேலுச்சியை

வானியலார் மேருஎன்று வழங்கினார்

நிலவியலார் வடதுருவம் என்று சொன்னார்

புராணகாரர் இமயத்தை மேருவென்று எழுதிக்கொண்டார்

சுற்றுகின்ற வேகத்தில் பம்பரத்தின் மேல் உச்சி

தலை சாய்ந்து வரும் அதுபோலே

பூமியும் சுழன்று வரும் வேகத்தில்

தலை உச்சி கொம்பு சுற்றி வரும்

அதனையே கதிபேத மென்று கணக்கிடுவார்

கதிரவன் இழுத்துப் பிடிக்கும் ஆற்றலினால்

புவியோட்டத்தின் தூரமும் மாறுபடும்

கோடையும் மழையும் குளிரும் பனியும்

மாறிவரும் பருவமும் வேறுபடும்

செங்கதிரை வலமாக சுற்றுகின்ற

நிலமகளும் தடம்புரளும் நிலைமையினால்

அலை கடலும் இடம் பெயரும் பிரளயம் என்பார்

இந்தப் பெரிய இயற்கைக்கும் மேலாக

வானத்து கொள்ளி ஒன்று வீழ்ந்தது பூமியிலே

ஆஸ்திரேலிய பெருந்தீவு ஆயிற்று

அந்தப் பேர் அதிர்ச்சிக்கு ஆளானது லெமூரியா

மலை தகர்ந்தது கடலலை சூழ்ந்தது

நெடு நிலம் பெயர்ந்து சிறுசிறு தீவானது.

ஆக லெமூரியப் பெருநிலம் சிதறுண்டு

மாய்ந்தது போக மீந்ததே குமரிக்கண்டம்

சாத்திரக்காரர் சரித்திரக்காரர் கணக்குப்படி

மூன்றாவது ஊழி முடிந்தது முடிந்தது

வானத்துக் கொள்ளி வந்து வீழ்ந்த வரலாற்றை

மேற்புலத்தார் லோத்தின் நாளில் ஒரு கொடிய

நெருப்பு மழை பொழிந்து உலகை எரித்ததென்றார்

தென்புலத்தில் அன்றிருந்த மன்னவனே ஆதிமனு

சத்திய விரதனென்று சாற்றுவதும் அவனையே

வைகைக் கரையில் தவமிருந்து அரசிருந்தான்

வைகையைக் கிருதமாலை என்று வந்தவர் சொன்னார்

மீன்வடிவில் ஒருதோணி கொண்டு

பெரிய வெள்ளத்துக்குப் பிழைத்துச் சென்றதால்

மீனவன் என்றும் அவனைச் சொன்னார்

அந்த மனுவுக்கு ஒரு மகனிருந்தான்

அவன்பேர் இயமன் மகளிருந்தாள் அவள் பேர்-இழை

இயற்கையின் சீற்றத்தில் இழந்தபகுதி

இயமன் பங்கு ஆதலின்

அழிவுக்கும் சாவுக்கும் அவன்பேர் ஆனான்

எஞ்சியபங்கு இழையின் பங்கு

குமரிக்கு உரியதால் குமரிக்கண்டம் என்றார்

பெண்வழியே மண்ணுரிமை கொண்டது அவள் மரபு

தாயாதி தாயபாகம் என்ற வழக்காறும்

மருமக்கள் தாயமென்ற வழிமுறையும்

இழையின் பேரால் ஏற்பட்டது

குமரிஆற்று நாகரிகச் சுவடு அதுவே

குமரியாறும் கோடும் அழிந்தபின்

கொல்லங் கரைக்கு குடிபெயர்ந்தார் ஆயினும்

மருமக்கள் தாயத்தை மறக்கவில்லை

அதங்கோட்டு அரசரும் கொச்சிக் கோமக்களும்

கொண்டிருந்த வழிமுறை உரிமை அதுவே.

நானிலம்

நீரும் நிலனும் நேர்ந்த இயற்கைக்கு

இசைபட நிலத்தை திணைப்படுத்தினார்

மாலையும் மலைவளம் கொழிக்கும் சாரலும்

குறிஞ்சிமலர் கொண்டு குறிஞ்சி ஆயிற்று

காடும் கார்முகில் பார்த்த நிலனும்

முல்லை மணம் சிறக்க முல்லை ஆயிற்று

ஆறும் ஓடையும் அயல் நின்ற வயல் வெளியும்

மகரந்தம் மிகுந்த மருதத்தால் பெயர் கொண்டது

நெய்தல் மலர் கொண்டோ நெய்தலி மீன் கொண்டோ

கடலடுத்த, மணற்பரப்பை நெய்தல் என்றார்

குறிஞ்சி மகனே வெற்பன் சிலம்பன்

மகளிர் குறத்தி கொடிச்சி ஆவாள்

முல்லை மகன் தோன்றல் நாடன் ஆவான்

மகளிர் ஆய்ச்சி இடைச்சி ஆனார்

மருதத்து உறைவோன் ஊரன் நகரன்

மகளிர் மனைவி கிழத்தி ஆனாள்

நெய்தல் ஆடவன் அளவன் புலம்பன்

பரதவர் கரையர் என்றும் பகர்வார்

மகளிர் பரத்தி நுளைச்சி எனப்பட்டாள்.

தொழிற் படு வகையிலும் அவனுக்குத்திணைப் பாடுண்டு

தேனெடுத்து தினையறுத்தான் குறிஞ்சி மகன்

நிறைமேய்த்து வரகறுத்தார் முல்லைக்காடவர்

சுழலும் உலகம் ஏரின் பின்னதாக

வாழையும் நெல்லும் வளர்ந்தது மருதத்தில்

உப்பெடுத்து முத்துக் குளித்தான் நெய்தலன்

நிலத்துக்கும் அதன் இயல்புக்கும் ஏற்ப

வளமும் வாழ்வும் நால்வகைப் பட்டதால்

நானிலம் என்றார் நாளும் செழித்து

நாகரீகம் மிகுந்த பின்னே

இந்த நானிலத்தை மாநிலம் என்றார்.

நாவலன் தீவு

பறவையினத்து ஒலி வகையைப் பழகி

மிருக இனத்து குரலை இனங்கொண்டு

மனுக் குலத்தின் ஓசையுடன் உறவுபடுத்தி

பேசிப் பேசி ஒலிக்கு வடிவம் கொடுத்தான்

இருபத்து நான்கு சாயலில் எழுத்தாயிற்று

எழுத்தை உயிரென்று மெய்யென்று வகுத்தான்

அடிப்படை உயிர் ஐந்தே ஆ ஈ ஊ ஏ ஓ

மெய்வகை பதினெட்டு ஆயுதம் ஒன்றே

ஆக இருபத்து நான்கு ஒலிகளே

தமிழக்கு இயல்பான அமைப்பு

உயிரை ஓசை குறைத்து ஒலித்தான்

குறில் ஐந்தாயிற்று இருகுறிலை இணைத்தான்

அஇ-ஐ என்றும் அஉ-ஔ என்றும்

ஆக பன்னிரண்டு உயிராகப் பண்படுத்தினான்

வலித்தும் மெலித்தும் இடைப்பட ஒலித்தும்

மெய்யை இனம்பிரித்து நயப்படுத்தினான்

ஓசை சுவைபட ஒலியைச் சுரப்படுத்தினான்

நாவளம் கொழித்தது நாவலன் ஆனான்

நாடும் நாவலன் தீவெனப்பேர் கொண்டது

மொழிந்து மொழிந்து மொழியானது

இசைத்து இசைத்து இசையானது

எழுத்தும் சொல்லும் பொருள் குறித்ததென்ற

மொழிமுதல் காரணம் தெரியாத அயலார்

நாவல்மரம் மிகுந்ததால் நாவலம் தீவென்றார்

நாலு காலுடையதை நாற்காலிஎன்றாங்கு

எண்ணும் எழுத்தும்

ஒலித்து ஒலித்து உருவம் கொடுத்து

வரி வடிவென்ற வழக்கிற்கு வர

முதற்கண் பொருளின் வடிவைப் பொறித்தான்

சித்திர எழுத்தென்று செப்பினர் முன்னோர்

சீனர் முறையும் அந்த சித்திர வகுப்பே

செந்தமிழன் வகுத்தது கண்ணெழுத்து

கண்ணெழுத்து வளர்ந்து கல்லெழுத்தானது

ஒட்டு உடைவு வளைவு நெளிவுகளை

ஒழுங்கு படுத்தி வெட்டெழுத்தாக்கினான்

வட்டெழுத்தென்ற வடிவுக்கு வந்தான்

ஏடுதிருத்தினான் எழுத்தாணி பிடித்தான்

நெட்டெழுத்தாகி நெடுங்கணக்கானது

யவனர் எழுத்தும் தமிழினத்துச் சாயலே

எழுத்தில் சிறந்தான் எண்ணத்தில் உயர்ந்தான்

மண்ணிலும் வளம்பார்த்து வகுத்தான்

தெங்கம் மதுரை முன்பாலை பின்பாலை

குன்றம் குணகரை குறும்பனை என்று

நாற்பத்து ஒன்பது நாடுகள் ஆயின

எழு நூற்றுக் காவதம் இடம் கொண்டதென்றார்

காவதத்திற்கும் கணக்குண்டு சொல்லிவைத்தார்

அணுக்கள் எட்டுகொண்டது ஒரு தேர்த்துகள்

தேர்த்துகள் எட்டுகொண்டது பஞ்சிழை

பஞ்சிழை எட்டுகொண்டது மயிரிழை

மயிரிழை பட்டுகொண்டது ஒரு மணல்

மணல் எட்டு கொண்டது ஒரு கடுகு

கடுகு எட்டு கொண்டது ஒரு நெல்

நெல்லளவு எட்டு கொண்டது ஒரு விரல்

விறற்கிடை எட்டு கொண்டது ஒரு சாண்

சாணிரண்டு கொண்டது ஒரு முழம்

முழம் நான்கு கொண்டது ஒரு கோல்

ஐநூறு கோல் அளவு ஒரு கூப்பீடு.

கூப்பீடு நான்குக்கு ஒரு காவதம்

முன்னைத் தமிழன் முழக்கோல் முறையில்

காவதத்துக்கு எண்ணாயிரம் முழங்கள்

பின்னும் பொருள் நூல் புகன்ற புலவன்

தூரத்தை நேரத்தால் யோசனை என்றளந்தான்

யோசனை ஒன்றுக்கு காவதம் இரண்டென்றார்

இன்றய அளவைமுறை இவற்றிற்கு மாறுபடும்

மைலும் கிலோவும் இன்று வந்த புதுக்கணக்கு

ஒன்றிரண்டென்று ஒன்பதுக்குமேல்

இன்றுவரை உலகில் எவனுமே எண்ணவில்லை

சுன்னத்தில் பெரிய எண்ணுமில்லை

பால்கணக் கெழுதும் பாட்டியர் இன்றும்

சுவரில் கோடுகிழித்துக் கூட்டுவார்

பழந்தமிழரும் ஒன்றுக்கு ஒரு கீறல்

இரண்டுக்கு இருகீற்றென்று கீறினார்

கீறிக்கீறி ஏடு கிழிந்ததோ

கோடுபோட்டுச் சுவரும் கொள்ளவில்லையோ

எண்ணுக்கு எண் இடு குறியாக

ஒன்றுக்கு ககரம் இரண்டுக்கு உகரம்

என்று தொடர்ந்து யகரத்தை பத்தென்றார்

ஆயிரத்துக்கு தகரம் நூறாயிரத்துக்கு

ளகர மென்றார் கணக்கில் அடங்காத

பதினான்கு சுன்னம் பத்து நூறாயிரம்

கோடிக்கு வைத்தபெயர் சங்கம்

இருபத்திநான்கு சுன்னமிட்டால் விந்தம்

இருபத்தொன்பது சுன்னம் ஆம்பல்

முப்பத்தாறு சுன்னத்தை குவளை என்றார்

கன்னம் ஐம்பதுக்கு நெய்தலாக்கினார்

இன்னும் எண்மடங்கு பெருக்கினால் வெள்ளம்

நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்

கமலமும் வெள்ளமும் நுதலிய கணிதத்தை

பரிபாடல் பகர்ந்தது மேல் வாயிலக்கம்.

ஒன்றை இருபது கூறாக்கினால் மா

ஐந்திலொன்று நாலு மா

எண்பதிலொன்று காணி

பதினாறி லொன்றினை வீசம் என்பார்

அரையில் அரையை கால் என்றார்

காலின் அரை அரைக்கால் ஆகும்

அரைக்காலின் அரையும் வீசமே

முன்னூற்று இருபதில் ஒன்று முந்திரி

ஏழால் வகுத்தால் இம்மி இன்னும்

ஏழால் வகுத்தால் அணுஎன்று

கீழ்வாய் இலக்கம் மேலும் செல்லும்.

யாழ் பிறந்தது

எண்ணோடு எழுத்தோடு இயல் ஐந்தென்றார்

ஏழு நரம்பெடுத்து பண்ணென்றார்

நரம்பைச் சுரமென்று சொல்லுவார் புதுமரபு

ஒளியை இனம்பிரிந்து ஏழுநிறங்கொண்டார்

ஒலியை வகைப்படுத்தி ஏழுசுரம் என்றார்

பண்ணும் திறமுமாக இன்று பயிலுவது

ஒன்பது குறைய ஒரு பன்னீராயிரம்

இத்தனை வளர்ச்சிக்கும் வித்தாக ஆதியில்

வேட்டுவன் வில்லிழுத்தான் நாணதிர்ந்த ஒலி

உள்ளத்தைத் தொட்டது உணர்வை வருடிற்று

இசைக்குலத்தின் முதல் யாழ்பிறந்தது

சீரியாழ் பேரியாழ் சகோட யாழுடன்

செங்கோடும் மகரமும் யாழாயின

ஆதியாழுக்கு ஆயிரம் நரம்பு தொடுத்தான்

காழ்வரை நில்லா கடிங்களிற்று ஒறுத்தலை

யாழ் வரை நிறுத்தினான் மலைவளர் வேட்டுவன்

குறிஞ்சி நிலத்துக் கொடிச்சியர் பாட்டுக்கு

மறம்புகல் மழகளிறும் உறங்கிற்று என்பார்

எரினப் பிறப்பான அசுனமா என்பது

இசையறி பறவை யாழிசைத்துப் பிடித்தார்

மேய்ந்து திரிந்த மாடுங்கன்றும்

ஆயன்குழலுக்குத் தொடர்ந்து வரும்

ஆறலைகள்வரும் பாலைப் பண்ணுக்கு உருகினார்

அவர் கொடுவாளும் நெடுவேலும் கைநழுவும்

இயற்றமிழுக்கு இசைகூட்டினால் ஆளத்தி

எழுத்தும் சீரும் அடியும் தொடர

பொருளும் தாளத்தோடு பொருந்துவதே பண்

இடக்கை உடுக்கை பேரிகை பறைஎன

மத்தளவரிசைகள் தோற்கருவி

வண்டு துளைத்த மூங்கிலில் புகுந்து

தென்றலும் ஊதிற்று குழலோசை

சுரத்துக்குச் சுரம்பாடும் துளைக்கருவிகள்

இசைக்கலையும் நுணுக்கமாக வளர்ந்தது

வண்டுகள்பாட மொட்டு மலர்ந்தது

யாழும் இசைத்து கல்லும் கரைந்தது

தொட்டிலில் தொடங்கிற்று ஆராரோ ஆரிரரோ

ஊஞ்சல் பாட்டுக்களை ஊசல்வரி என்றார்

ஆற்றுவரி கானல் வரி அம்மானை பாடினார்

ஏற்றப்பாட்டு ஏர்ப்பாட்டு எதிர்ப்பாட்டும் உண்டு

மங்கல வாழ்த்துடன் வாழ்க்கை துவங்கும்

செறுப்பரை பரிபாட்டுடன் நெய்தலும் கறங்கும்

இரையோடு இசைந்ததே அவன்கதை

பாணன் பறையன் துடியன் கடம்பன்

இந்நான் கல்லது குடியும் இல்லை என்றார்

அவரவர் இசைத்தக் கருவியே பெயர்தந்தது

ஆதி மனுக்குலம் இசைவழி நான்கானது

மறந்தானோ இழந்தானோ மாய்ந்ததோ பழங்கலை.

மீந்த சுவட்டில் பிறந்ததே வீணை

பழய வில்லின் புதுப்பிறப்பே சாரங்கி

முளரி என்ற தொரு யாழும் கண்டார்

யாழும் பாணரும் இன்று நம்மோடில்லை

இலங்கைக் திட்டின் பகுதிக்குப் பேரானது

யாழ்க்குல மெல்லாம் பழங்கலை வகையில்

சித்திரங்களாக சிற்பங்களாகத் தெரிவதல்லால்

வழக்கிலில்லை வழக்கிறந்ததும் பெருமையோ

பழய பண்கள் பலவும் இறந்துபட்டன

இருக்கின்ற சிலதில் சிலவற்றிற்கு

பெயர் தமிழாக இல்லை பெயர் திரிந்து வரும்வரவு

வைகறைக்கு இந்தோளம் என்பார்

பொழுதுபுலர பூபாளம் பாடுவார்

மதியத்தில் சாரங்கம் மாலையில் காம்போதி

அந்தியில் கல்யாணி ஆர்இரவில் ஆகரி

வேளைக்கு வேளை வேறுபடும் ராகம்

முன்னைத்தமிழன் தந்துபோன செல்வம்

வடிவிழந்தது மரபிழந்தது யாழிழந்தது தமிழிழந்தது

ஆயினும் சுருதியிழக்கவில்லை சுவையிழக்கவில்லை

பகலுக்கு பண்கள் பத்தென்று வகுத்தார்

நாழிகை மூன்றுக்கு ஒன்றாக நடத்தினார்

புறநீர்மைப் பண்ணே சீகண்டி ராகம்

காந்தாரத்தை இச்சிச்சி என்றார்

கௌசிகமே பைரவி ஆயிற்று

இந்தளத்தை நெளித பஞ்சமி என்பார்

தக்கேசி பண்ணே காம்போதி ஆகும்

சாதரிப் பண்ணை பந்துவராளி என்பார்

நட்ட பாடையே நாட்டைக் குறிஞ்சி

பழம் பஞ்சுரமே சங்கராபரணம்

காந்தார பஞ்சமம் கேதார கௌளை

பஞ்சமத்தை ஆகரி எனப் பகர்ந்தார்

இரவுக்கு பொழுதை எட்டாக வகுத்தார்

பொழுதுக்கு ஒரு ராகமாக புகன்றார்

தக்க ராகமே கன்னட சாம்போதி

பழந்தக்க ராகம் சுத்தசாவேரி

சீகாமரம் நாத நாமக் கிரியை

கொல்லிப் பண் சிந்து கன்னடா

வியாழக் குறிஞ்சி சௌராஷ்டிரம்

மேகராகக் குறிஞ்சி நீலாம்பரி

குறிஞ்சிப் பண்ணை மலகரி என்றார்

அந்தாளிக் குறிஞ்சி சைலதே சாட்சி

முந்தைய பண்வகை பிந்திய ராகமாக

பாடுகின்றார் ஆயினும் பழந்தமிழன் கணக்குப்படி

பண்கள் நூற்று மூன்றும் இன்றய

மேளக்காத்தாக்கள் எழுபத்து இரண்டுக்குள்

இடம் கொள்ள வில்லை இனம் தெரியவில்லை

பெயரும் மரபும் பிறழ உரைப்பார்

மறந்தது போக பெயர் திரிந்தது போக

மிகுந்த பண்களை நிகண்டுகள் சொல்லும்

பாவுக்குப்பா, பாடுகின்ற ராகமும் வேறுபடும்

அகவலுக்கு ஆரபி, கலித்துறைக்கு பைரவி

வெண்பாவை சங்கராபரணத்தில் சொல்லுவார்

செந்துறையின் வழக்காறும் வரலாறும் இதுவே

இயலும் இசையும் மெய்பாட்டுடன் இசைய

நாடகத் தமிழ் என்று நவின்றார்

கதையும் நிகழ்ச்சியுமாக தொடர்ச்சியுடன்

உள்ளதும் சொல்வார் புனைந்தும் உரைப்பார்,

ஊர்ச் சதுக்கத்தும் திருக்கோயில் முன்பும்

பொதுக் களத்தில் நிகழ்த்துவதைப் பொதுவியல் என்றார்

அரையன் பேரவையில் ஆடுவது வேத்தியல்

பல்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில்

நிகழ்ந்தவற்றை நிரல்பட தொகுத்து

உணர்வோடு கலந்து உயிரோடு படைப்பார்

வசைக்கூத்து புகழ்க்கூத்து வரிக்கூத்து வரிச்சாந்தி

தேசிகம் இயல்பென்று இரண்டிரண்டாக இனம் பிரித்து

இன்னும் உள்வரியாக குறவை கலைநயம்

சரணம் நோக்கு குடக்கூத்து தோற்பாவை

எனப் பல்வேறு கிளைகள் விரித்தார்

ஆகக் கதைகளை நடிப்பது நாடகம்

உணர்வுகளை கருத்துக்களை உருவகப் படுத்தி

ஊமை நிலையிலும் உவமை நிலையிலும்

பண்ணும் தாளமும் பின்னணி செய்ய

காலில்சதங்கை கலீர் கலீர் என

குடகம் மகரம் வலம்புரி விற்படி

இளம் பிறை என முப்பத்து மூன்று முத்திரை

சுவைக்குச் சுவைகூட்டி மேடை ஏற்றினார்

குறிஞ்சிக் கூத்து குன்ற குறவையாக

வேட்டுவ வரி என்றும் விளம்பினார்

முல்லையில் ஆய்ச்சியர் குறவை ஆடினார்

மருதத்தில் பள்ளும் வள்ளையும் பரவசப்பட்டது

நெய்தலில் கானல்வரி கேட்டது

ஆக ஆடற்கலை நாட்டிய மெனப்பட்டது

நாடக நாட்டியப் பொதுபெயர் கூத்து

நடப்பது போன்று நடிப்பது நாடகம்

பொருளும் உணர்வும் புரியாத அயலார்

நாடகச் சொல் தமிழில்லை என்றார் அறியாமை!

புனைந்து வேடமிடுவார் பொருநர்

கூத்தர் பொருநர் விறலியரென்று

கலைவளர்த்த செல்வரே காலவெள்ளத்தில்

ஆடற்கலை திரிந்து பரதமாக

பரதரும் பரத்தியரும் ஆனார். பின்னால்

பழிப்புக்குரிய பரத்தையர் ஆயினர்

வெண்டுறைக்கு விளைந்த கொடுமை இதுவே

யாழ்தான் வாழ்விழந்தது என்பதில்லை

யாழோர் மரபும் தாழ்ந்தது தாழ்ந்தது

உணவும் உணர்வும்

உள்ளந்தெளிந்தவன் உண்ணவும் தெரிந்தான்

உவர்ப்பில் தெளிவும் துவர்ப்பில் வலிவும்

கார்ப்பில் வீறும் கைப்பில் மெலிவும்

இனிப்பில் தடிப்பும் புளிப்பில் இனிமையும்

என அறுவேறு சுவைக்குப் பயன்வேறு தெரிந்தான்

உணர்வெனப்பட்டதே உணர்வுக்கு அடிப்படை

ஆதலின் உள்ளத்தின் மனப் பாங்கில்

இன்பம் துன்பம் விருப்பு வெறுப்பு

அச்சம் ஆத்திரம் வியப்பு நகைப்பென

எட்டுவகையாக இனங்கண்டான்

சாந்தி என ஒன்று கூட்டி ஒன்பதாக்கினர்

நாலாம் காலத்தில் நவரசம் என்றார்

பாம்பு உரித்து எடுத்த சட்டையோ

பசுமூங்கிலின் உள்ளே படர்ந்த ஏடோ

பால் நுரையோ வெண்புகையோ எனமெலிதாய்

ஆடை அறுவை கச்சை கலிங்கம்

துகில் முதலாக பணிப்பொத்தி ஈறாக

முப்பத்துஅறு வகை உடைவகை

பட்டிலும் பருத்தியிலும் நெய்யத்தெரிந்தான்

பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை

இழைகலனென்று பொன்னிலும் மணியிலும்

புனைந்த அணிவகை பெரிதினும் பெரிது

முத்தும் பவளமும் கைவளையாகும்

சங்கிலிசரப்பளி சவடி ஆரமென்று

எழுத்துக்கு யாத்தனர் காதில் குழையாடிற்று

உச்சிப்பு, தென்பலி வலம்புரி எனவே

தலைக்கு ஒரு கோலம் செய்தார் மகளிர்

நறுநெய்யும் மண மலரும் மங்கலம் செய்யும்

இளமைசதிராட வளமை கொஞ்சும்

களவும் கற்புமே அவர் வாழ்வியல்

கற்புக்கு புறம்பான களவை அவர் அறியார்

கந்தர்வமென பட்டபுற நடையாளர்க்கு

கற்பு பொறுப்பன்று கன்னியும் தாயாவாள்

தமிழ்ப்பாடி கற்பெனப்படுவது சொல் திறம்பாமை

ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்நெறி

ஒருதலைப் பட்ட விரதமல்ல

அவனொரு துள்ளும் இளங்காளை வயது பதினாறு

கறுகறுவென்று புதுமீசை அரும்புகட்டும் பருவம்

அவளும் அன்றலர்ந்த புதுமொட்டு

ஆண்டு பனிரெண்டில் அடிவைத்திருப்பாள்

செம்புலப் பெயல் நீர்போல

அன்பு கலந்த நெஞ்சத்து ஆருயிரும்கலந்து

ஊரும் நாடும் உவப்ப மணப்பார்

ஒத்துக் கொள்ளாது ஊரலர் தூற்றம்போது

வேற்று நிலத்தின் விருந்தனர் ஆவார்

உடன் போக்கென்று உரைத்தனர் மேலோர்

இதுவே காதல் களவெனப் படுவது

நாற்பத்தெட்டாண்டு வாலிபம் காத்த

ஒருவனுக்கு பன்னிராண்டு பருவத்தவளை

தானமாகத்தருவது அயலார் மணமுறை

தமிழ்ப் பண்புக்கு முரணான ஒன்று

முந்நீர் வழக்கம் முன்னை ஆரியர்க்கு இல்லை

ஆற்றுநீர் ஊற்று நீர் மழை நீர் என்ற

மூன்றும் ஒன்று திரண்ட பெருங்கடலே முந்நீர்

பெருநீர் ஓச்சுதல் தமிழனுக்குப் பிறப்புரிமை

திரவியம் தேட திரைகடல் ஓடுவான்

அதனைப் பொருள் வயிர் பிறிதல் என்றார்

கல்விக்குப் பிரிகின்ற கடப்பாடும் உண்டு

போருக்கும் தன்னை பணயம் வைத்து போவான்

வேட்டை மேற் செல்வதும் வீரவழக்கே

மற்றபடி குலமென்றும் நலமென்றும்

இளங்காதலரைப் பிரித்ததில்லை

குலம் என்பது குடிப்பெயர் அல்லது

பிறப்பினால் வேற்றுமை குறிப்பது அன்று

சீரும் வரிசையும் சிறப்பின் கொடையே

விலங்கின மாற்ற விலைப் பொருளல்ல

யாதும் ஊரே யாவரும் கேளீர்

ஒன்றேகுலம் ஒருவனே தேவன்

என்பதே அவன் சமுதாய மனப்பாங்கு

வீரமும் காதலும் அவனுடன் பிறப்பு

உணவு கொண்டு உடலைப் போற்றினான்

உடைகொண்டு உணர்வைப் போற்றினான்

தீதற்றதே அறமெனக் கண்டான்

சொல்லும் செயலும் ஒரு வழிப்பட

பயன் மிகுந்த நல்வழியில் பழகினான்

பழக்கமே வழக்கமாக ஒழுக்கமாயிற்று

ஒழுக்கத்தை உயர்வை விழுப்பம் என்றான்

விருப்பத்தின் விழுப்பமே ஞானம் ஆயிற்று

விருந்து புறந்தந்து வீட்டுக்கும் நாட்டுக்கும்

ஏற்பன செய்தான் இல்லறமென்றார்

பிறர்க்கென்று வாழ்ந்த சாண்றான்மையை

தன்னல மறுப்பினை துறவறமென்றார்

இயற்கையிலும் பெரியதெய்வம் அவருக்கில்லை

கதிரவனை கொடிநிலை என்று தொழுதார்

உயிரும் பயிரும் தழைக்க ஒளிசெய்து

பாரை நடத்தும் கண்கண்ட பருப்பொருள்

கதிரவன் என்பதால் முதன்மை தந்தார்

காய்கின்ற நிலவை வள்ளிஎன்று வணங்கினார்

புறத்தில் குளிர்ந்து அகத்தில் வெம்மையுடன்

கிளர்ச்சியும் வளர்ச்சியும் தருகின்ற பேராற்றல்

இரவில் உலகைக் கொண்டு நடத்தும் குளிரொளி

வள்ளி என்பதால் வாழ்த்தினார் வழிபட்டார்

எரிதழலை கந்தழி என்று போற்றினார்

சூடும் சுடரும் சூழ் ஒளியும் உடையது

ஆக்கவும் அழிக்கவும் வல்ல பேராற்றல்

கதிருக்கும் நிலவுக்கும் கண்கண்ட எதிரொளி

மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று

ஆதலின் கதிரோடு நிலவோடு வைத்தெண்ணினார்

நம் முன்னோர் கண்ட முத்தீ இதுவே

முன்னைப் புகார் நகரத்து புறநகர்ப் பகுதியில்

சூரிய சோம அக்கினி என்ற

மூன்று குண்டங்கள் மூட்டியிருந்தார்

என்பதற்குப் புறச்சான்றாக இன்றும்

திருவெண் காட்டில் மூன்று குளங்கள் உண்டு

ஆரிய மரபு அறைகின்ற முத்தீ

ஆகவநீயம் காருக பத்தியம்

தட்சிணாக்கினியம் என்ற மூன்று

வேள்வித் தீயில் நெய்யும் பொரியும்

காய்ந்த சுள்ளிகொண்டு காய்வதாகும்

உயிர்க்கொலை செய்த ஊனைவானவர்க்கு

அர்க்கியம் என்று அனுப்பி வைக்க

அங்கியந்தேவனை மும்முனைப் படுத்தி

அளித்த பெயரே ஆரிய முத்தீ

தமிழன் கண்ட தழல்வேறு வழிவேறு.

செந்தமிழ்ச் சுவடு

முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்ட தமிழர் நாகரீகம் பெரிதென்பேன்

பொய்யும் வழுவும் புரையோடாத வாழ்வு

இல்லை என்னாதவர் என்பும் பிறர்க்கு உரியர்

அறமும் மறமும் அகமும் புறமுமாக

வாழ்ந்த லெமூரிய வழிவழி வந்தவன்

மாவலி என்றொரு மன்னவன் இருந்தான்

அவன் பெயரால் மாவலிக் கரை என்று

சொல்லுகின்ற ஊர் கேரளத்திலுண்டு

மாவலி கங்கை இலங்கையில் ஓடுகின்றது

மாவலிபுரமென்ற கடல்துறை பட்டினம்

மாமல்லபுரம் என்று பெயர் மாறிற்று ஆயினும்

அங்க மாவலி சிற்பமாக நிற்கின்றான்

பாண்டியத்து படைத்தலைவரில் ஒரு பரம்பரை

மாவலி வாணராயர் என்று பட்டம் கொண்டிருந்தது.

கேரளத்தில் ஓணத் திருவிழா இன்றும்

மாவலிக்கே நடக்கின்றது மறக்கவில்லை

வாமனனுக்கு வாக்களித்த மன்னவன் அவனே

மண்ணே இழந்தான் மாதவன் ஆனான்

அந்த மாவலிக்கு மக்கள் ஐவர்

அவர்களில் வலியவர் மூவர் அரசரானார்

சேர சோழன் செழியன் என்று

சொல்லுகின்ற குலங்கள் மூன்றானது

வடபெண்ணைக்குச் சென்ற மகன் வடுகன் ஆனான்

கபினி கடந்து காவிரிக்கு அப்பால்

கருநிலத்துச் சென்றவனை கரு நடன் என்றார்

சொத்துரிமை தந்தைவழிப் பட்டது ஆயினும்

வழக்காற்றில் பங்காளியை தாயாதி என்றே வழங்கினார்

பிரளயத்துக்குத் தப்பிய மேலைக் கரையாளர்

யோர்தான் நதிக்கரையில் யூதரானார்

அமெரிக்க அமேசான் ஆற்றுப் படுகையிலே

மெக்ஸிகோ நாட்டு மலை முகட்டினிலே

கலிபோர்னிய மண்ணில் தென்புலத்துச் சாயலை

பெரூவியம் மாயா என்றே வளர்த்தார்

அழிந்த சுவடும் அழியாத நிழலும்

இன்றும் லெமூரியத்தை நினைவுறுத்துகின்றது

தெறல் பஃறி சுவரோவிய எழுத்துக்கள்

சொல்லுகின்றபடிக்கு தென்னவன் நாட்டு

பாண்டியக்கரையிருந்து சென்ற பழயவரே

நீலாற்றுப் படுகையில் எகிப்திய ரானார்

மக்கள் உரைவிடத்தை ஊர் என்றே உரைத்தார்

நம் முது மக்கள் தாழி முறைப்படியே

பிரமிட் கோபுர புதைகுழி வழக்காயிற்று

மனுவென்னும் பெயரையே மேன்சு என்று

எகிப்தின் முதல் மன்னவன் தரித்தான்

சிதறிப் போன செந்தமிழ்ச் சோழரே

சாலடிய ரென்று சாத்திரம் சொல்லும்

சேர இனத்திலிருந்து சென்றவரே கிரீத்துகளானார்

சுமேரியர் அக்கேடியர் என்று சொன்ன

பாபிலோனியப் பரம்பரை பகலவ வழிபாடுடையது

அண்ணாமலை முகட்டில் அகண்டம் ஏற்றும்

செந்தமிழ் ஒளிவிளக்கு சென்றவர்க்கும் உண்டு

ட்யூடானியர் வழிபட்ட ஓடன்கடவுள்

பெண்ணை தன்பால் வைத்த சிவனே

பழய ரோமரின் ஜுபிடர் வழிபாடும்

தென்னகத்து சிவபூசை என்றே சொல்வார்

அவர்கள் ஊரும் பேரும் உரிச்சொல்லும்

தமிழின் வேரடிப் பிறந்ததென்றே விளங்கும்

வாழ்வியல் வழிபாட்டு முறைகளில்

தமிழ் தழுவிய சாயலே தெரிகின்றது

சியாஸ் என்றதொரு கடவுளுக்கு

சடைமுடியும் முத்தலை வேலுமுண்டு

படைப்புக்கு வேலென்றார் முருகையும் வழிப்பட்டார்

ஏசுபிரான் காலத்தில் எல்லாம் வல்லவனை

ஏலோகி என்றார் எல்சடை என்றார்.

சூரியனென்ற பொருளே சொல்லும் தமிழே

இஸ்ரவேல் மரபினர் ஆன்கன்றை தொழுதது

தென்புலத்து நந்திக்குச்சான்று

சூரிய சந்திர வழிபாட்டை

கோயிலுடன் மெக்ஸிகோ கொண்டிருந்தது

ஆளுயர லிங்கம் ஒன்று இன்றும்

விடியா கல்லறையின் மேல் நிற்கின்றது

நடுகல் நிறுத்துகின்ற நம்வழக்கே அதுவாகும்

சென்றவர் நம்மவர் என்பதற்குச் சான்றுகள்

ஒன்றிரண்டென்று ஒன்பது வரை

எண்ணுகின்ற கணக்கு முறையும்

ஞாயிறு முதலாக சனி ஈறாக

சொல்லுகின்ற கிழமை வரிசையும்

கோள்களைப்பற்றிய கொள்கையும்

சென்றவர்க்கும் நம்மவர்க்கும் இன்றுவரை ஒன்றே

அவர்களும் ஞாயிற்றை பகலவன் என்றே பகர்கின்ற

ஆய்வாளர் காணுகின்ற அடையாளங்கள்

தென்புலத்துப் பழம் பதிப்பென்பதே தெளிவு

மற்றபடி வடதுருவத்துக்கு ஓடித்திரிந்தவர்

மந்தை மேய்த்தார் மந்தையாகத் திரிந்தார்

மத்திய தரைப்பகுதியை வந்து வளைத்தார்

சரித்திரம் அவரையே ஆரியம் என்றது

சிந்து வெளிப் புதையல்

ஊழியில் லெமூரியர் மூழ்கியப் பின்னே

வடக்கில் இமயம் எழுந்த தென்பார்

விந்தயத்துக்கு அப்பால் கடலும் திடலானது

சிந்தும் கங்கையும் செழுமை செய்தது

பெருவெள்ளத்துக்கு பிழைத்த ஒருகுழுவினர்

மேற்கில் நடந்து விந்தியம் கடந்து

சிந்து வெளியைச் சேர்ந்தார்

இழந்த லெமூரியத்தை ஈடுகட்ட

சென்ற இடத்தை செந்தமிழ் ஆக்கினர்

சீலம் சீனாப்ரவி பியாஸ் சட்லஜ்

யாற்றுப் படுகையில் ஒரு நூறு கோட்டைகள்

தென்புலத்து சிற்பத் திறனாக நிமிர்ந்தன

வடபுலத்தை வளர்த்த பண்பாடும் மேம்பாடும்

ஆவிபோல் தழைத்தது தெற்கில்

புகழ் கொண்டிருந்த தென் மதுரைக்கு நிகராக

வடக்கிலும் ஒரு மதுரை அமைத்துக் கொண்டார்

சிந்து வெளி பண்பாட்டின் இலக்கியமாக

சிந்து வெளியை செம்மைப் படுத்திய

செந்தமிழ்ப் பரம்பரை தனிவேறு குடிமுறையில்

துருவாச துருக்கிய யதுக்கள் அணுக்கள்

பத்த பலாயண பரத அவிநய

விசுவாமித்திர விஷணிய பூருக்கள் என

தாயரசனை மறந்து தனியரசு ஆனார்

வடபுலமே தமிழ்ப் புலமாய்த் தழைத்தது

மண்மாரிப் பொழிந்ததோ மாநதி தடம் புரண்டதோ

நில நடுக்கத்தில் நெடு நகரங்கள் அழிந்தனவோ

கொள்ளையிட வந்த வெள்ளையினம் கொளுத்தியதோ

அழிந்தன சிந்து வெளி கோட்டைகள்

அழியாத பண்பாட்டின் காலடிச் சுவட்டில்

எழுதாத சரித்திரத்தை இடிபாடுகளாக

வருங்கால சந்ததியின் சிந்தனைக்கு விட்டு

இறந்தார் மேடென்று இலக்கியம் சொல்லும்

மூகிஞ்சதரையே மொஹஞ்தரோ

தகர்ந்த தரையே தகஞ்சதரோ

சரிந்த தரையே சான்ஹதரோ

நொடிஞ்ச தரையே லொஹஞ்சதரோ

அழிந்தமேடே அலிமுரடு

பாண்டி வாஹி அமரி கோட்லா

அனைத்தும் அழிந்து மண் மேடாயின

புதை பொருள் போடுகின்ற புதிரை அவிழ்த்தால்

அரிக்கா மேடும் ஆதிச்ச நல்லூரும்

புதுக்கோட்டை புதைகுழியும் ஆங்கே தெரியும்

சரித்திர காரர்கள் சாற்றுகின்றவாறு

ஹங்கேரியில் தொடங்கி ஆசியாவில் திரிந்து

சிந்துக்கும் கங்கைக்கும் ஆரியம் வருமுன்னே

வேதத்தின் ஒலி இங்கே கேட்கு முன்னே

வேள்வித்தீ இந்த மண்ணில் சூழுமுன்னே

தழைத்திருந்த சிந்துவெளி சிந்தனைக்கு வந்தது

மேலோர்கள் மண்மேட்டை வெட்டிப்பிரித்தார்

அகழ்ந்த இடங்களில் அடுக்கு மாளிகைகள்

அகல் நெடுவீதிகள் ஆழ்குழல் சாளரங்கள்

செய்குன்று பொய்குளம் சித்திரக் கூட்டங்கள்

முத்திரைச் சின்னங்கள் முதுமக்கள் தாழிகள்

சுட்டகற்கள் சுன்னப் பதுமைகள்

கூடம்குளியலறை கழிப்பிடம் வெளிப்புறம்

இன்னபலவும் தென்புலத்து அமைப்பே

லெமூரியம் லெமூரியம் என்றே அறைகூவும்

எழுத்துக்கள் படிக்க இயலவில்லை ஆயினும்

தமிழனின் கண்ணெழுத்துக்கும் முன்னெழுத்தே

சுமேரியச்சாயல் உடையதென்பார்

சுமேரியமும் செந்தமிழ்த் தென்னவன் சாயலே

அகப்பட்ட அணிமணிகள் தென்மதுரைக் கைவண்ணமே

தெய்வச்சின்னங்கள் சிவலிங்கத்தோற்றமே

ஆடவல்லான் பதுமை ஆரப்பாவில் அகப்பட்டது

கன்னடத்துப் பொன்துகளும் விச்சிமலை

தமிழ் தமிழென்றே குரல் கொடுக்கும்

திமில் பெருத்த எருதும் தென்னாட்டுக்கடாவும்

நாயும் கோழியும் நம்முடைய வளர்ப்புகளே

பாவை விளக்கும் பார்மகள் வழிபாடும்

பாண்டியத்து முன்மரபைப் பறைசாற்றும்

தென்னவர் நாடே வரலாற்றின் முன்னேடு

சிந்து வெளி சுவடே சான்றுக்குச் சான்று

சிந்தென்றால் ஆறென்றே செப்பினார் முன்னோர்.

ஆரியாவர்த்தம்

மேற்கில் நிலைகொண்டது போக நிலைகொள்ளாது

கிழக்கில் வழி நடந்த ஆரியம்

காடும் மேடும் கரடும் முரடும்

கடந்து வந்த வழித்தடத்திலெல்லாம்

கலந்த கலந்த கலப்பினமாக

கலவை மொழிக் குலமாக

இந்திய எல்லைக்கு வந்து சேர்ந்தது

கைபர் போலன் கதவு திறந்து கிடந்தது

காந்தாரத்தில் ஊடுருவி காஷ்மீரில் நுழைந்தார்

சிந்துவெளிச் செல்வம் சிந்தை மயக்கிற்று

வடக்கில் இமயம் நிமிர்ந்து நின்றது

தெற்கில் விந்தியம் தடுத்து கிடந்தது

கிழக்கில் ரமண தேயம் வரைச் சென்றார்

கங்கை யமுனை சோனை பிரமை

செய்த வளத்துக்கு கிறுகிறுத்தார்

பனிமலையும் பசுமையும் பரவசப் படுத்தியது

நாடோடி வந்தவர் இந்நாட்டோடு நின்றார்

முன்னைப் பழங்குடிகளோடு மோதினார்

உறவு கொண்டு கலப்பார் ஓரிடத்து

இரவோடிரவாக எரிப்பார் வேரிடத்து

எழுதாக் கிளவியாக எடுத்துவந்த

இருக்கென்னும் தோத்திரப் பாக்களை

எழுதிக் கொண்டார் இங்கிருந்த நாகரியில்

அந்த எழுத்துக்கு மேலிட்ட தலைக்கட்டை

அவிழ்த்தால் அங்கே தமிழ் தெரியும்

அதன் தாயெழுத்து நம் கண்ணெழுத்து என்பதும் புரியும்

இந்த நாள் சம்பல் பள்ளதாக்கின் சதுரப்பாடே

ஆரியம் நடந்த அந்த நாள் அடிச்சுவடு

தன் குலப் பகையை தஸ்யுக்களென்றார்

இயக்கர் அரக்கர் நாகர் என்றே

இழித்தும் பழித்தும் எழுதி வெறுத்தார்

தென்னவரைத் தெவ்வரென்று பழித்தார்

இந்திரன் ருத்திரன் மித்திரன் பிரமன்

வேள்விக்குரிய வேத நாயகரானார்

கங்கைக் கரை ஆரிய பூமி ஆயிற்று

ஆரிய வர்த்த மென்று ஆரவாரித்தார்

வாழ்ந்து தளர்ந்த பழங்குடியும்

வந்து கலந்த ஆரியக் குடியும்

ஒன்று கலந்த புதுக் குலத்தை

இந்தோ ஆரியம் என்றது சரித்திரம்

இந்தென்றால் நிலவென்று ஒரு பொருளும்

பசுமை என்று மற்றொரு பொருளும்

குளிரென்றும் சொன்னதைக் கொண்டு

பெயர் கொண்டது இந்தியர் என்பவரும்

பாரசீகர் ஆறென்று சொன்ன சிந்துவே

இந்தயா ஆயிற்று என்பவரும் உண்டு

சிந்துகரைக்கு இந்துவெளி என்ற பெயரில்லை

இமயமென்னும் நெடுவரைக்கு மறுபக்கத்து

மங்கோலியச் சீனரும் உரிமை கோருவார்

இந்த மண்ணுக்கே உரித்தான மாமலை

ஐநூற்று காவதத்துக்கும் நெடியது

விந்தியம், என்பதே விந்தியா இந்தியா

பரத கண்டமென்று பகர்கின்றவர்க்குச் சொல்வேன்

பரதன் சகுந்தலை பெற்ற மகன்

மிகவும் பின்னவன், நாடு பல்லாண்டு முன்னது.

வந்து புகுந்தவர்க் கெல்லாம் இந்த நாடு

வாழும் தொட்டிலானது போல்

பிறர் இட்டு அழைத்தது பேராயிற்றோ?

ஆரியமாக வந்த ஆதிமொழி

கலந்த கலந்த கலப்புக்கு ஏற்ப

சிதைந்து சிதைந்து பிராகிருதமாயிற்று

கொண்டு வந்த கதைகளை கவிதைகளை

கற்றுக் கொண்ட எழுத்தில் எழுதிக்கொண்டார்

வந்த இடத்தில் புதிதாய் பயின்ற

கலைகளையும் கொள்கைகளையும் நடப்புகளையும்

தங்கள் வண்ணமாக மாற்றிக் கொண்டார்

ஆதியில் வேதம் அவர்கட்கு மூன்றே

வேதம் த்ரயீ என்பதே அவர் நிகண்டு,

சூரியன்வாயு அக்னி மூவரிடத்தும்

பிரமனால் பெறப்பட்டது என்பார்

வேதம் என்றால் அறிவுறுத்துவது அதற்கு

மறைந்த நுண் பொருள் என்ற பொருளில்லை

வேதத்தை இசைகூட்டி ஓலமிடுதலே அவர்மரபு

அலைஅலையாக புதிய இனங்கள் வந்து புகுந்தன

ஆரியம் சிதைந்து வேதியம் ஆயிற்று

இதற்குமுன் இப்படித்தான் நடந்ததென்று

சொல்லுகின்ற இதிகாசங்கள் சரித்திரமாயிற்று

நடந்ததும் புனைந்ததுமாக

சொன்னவன் கற்பனைக்கும் கேட்டவன் ரசனைக்கும்

புராணங்கள் உருக்கொண்டு இலக்கியமாயிற்று

புது வெள்ளத்துக்கு மூழ்காது பிழைத்த

முதுகுடிகள் ஆதிவாசிகள் ஆயினர்

வேற்றியல் பண்பாட்டுத் தாக்குதலை மீறி

தாங்களும் அதுவாக தலைநிமிந்த

பழய தமிழியப் பரம்பரைகளுமுண்டு

அவர்கள் கொண்டு வந்த ஆதி கோத்திரங்கள்

ஆங்கிரச வசிட்ட காசிப பிருகு என்ப

மற்றபடி இங்கே உருக்கொண்ட கோத்திரங்கள்

அத்திரி கௌசிக அகத்தியம் முதலிய

கோத்திரம் என்றால் கோக்களுக்குரிய கொட்டில்

மந்தைக்கு மந்தை பெயர்வேறு தெரிய

தலைவனின் பேரால் தனித்து வழங்கினார்

அதுவே அம்மந்தைக்குரிய மக்களுக்கும் ஆயிற்று.

வந்த ஆரியம் கலந்த ஆரியம்

கலந்தும் கலவாத தமிழியல் எதுவென்று

சரித்திரம் தெரிந்தவர்க்குத் தடம் தெரியும்

முடிமரபும் குடியரசுமாக மோதிக்கொண்ட

குழப்பமே வடபுலத்து வரலாற்று அடிக்கோடு

தமிழனின் தலைசங்க நாட்களெனும்

மூத்த வரலாற்றுக் காலத்துக்கு முன்னதாக

லெமூரியம் நெடுங்கடலுள் மாய்ந்து

குமரிகண்டம் ஆவதற்கு முன்னே

இயக்கரும் நாகரும் மோதிக் கொண்ட

முன்னாள் கதையே கந்த புராணம்

குறிஞ்சிக்கு ஒரு கிழவன் சேயோன் முருகன்

அவனுக்கு மகள் கொடை தந்தவன் இந்திரன்

மருதத்து வேந்தன். மகபதி அல்ல

தன்னினப் பங்காளிக் காய்ச்சலில்

அவுணர்க்குப் பகையானான் அலைவாய் களமானது

பெரும் பெயர் முருகன் போர்த்தலைவனான்

சூரன் தோற்று வெற்றி வேலானதும்

பழந்தமிழ் வரலாற்றுச் சுவடே

அவன் தம்பி சிங்க முகன் பேர்கொண்டதே சிங்களம்

தென் தமிழ் நிலத்தில் சூரன் பேரால் கோட்டையுண்டு

சூர ஆதித்தச் சோழன் என்றொருவன்

சாவகத்திலிருந்து வெற்றிலை கொண்டு வந்தான்

மலையத்து வஜனின் மனை அரசி

காஞ்சன மாலைக்குத் தந்தையானவன்

ஒரு சூரசேன சோழன் என்பார்

சோழன் என்பதும் அந்த சூரர் வழிப்பெயரே

மிகமிகப் பின்னால் முன்னாள் முருகனும்

வடபுலத்து ஆரியப் பூச்சுக்கு ஆளானான்

சரித்திரப் புகழ் கொண்ட தஞ்சைக்கு

முன்னைப் பழம் பெயர் ஆவூர் என்ப

தஞ்சன் என்றொரு சூரன் ஆண்டது

கொண்டு ஆனது தஞ்சாவூர்

இன்றய இசக்கியும் இயக்கரின் நிழலே

தக்கனும் ஒரு நாகனே அவன் பெற்ற தமிழ்மகளே

தாட்சாயணி சிவனை மணந்தாள் என்ப

மாமனை மருகன் அழித்தது பரணி

முன்னைத் தென்னிலங்கை மன்னவர் வரிசையில்

சிவன் சிவன் என்றே பெயர் தொடரும்

தாருக வனமென்பது ஒரு தண்டமிழ் வனச்சோலை

மயிலாடு துறைப் பகுதி. இன்னும் மறப்பில்லை

விரிசடைக் கடவுள் எரித்த திரிபுரமே

திரிசிர புரமானது பின் யுகத்தில்

இன்ன பழங்கதைக்குரிய தேவர்

வானவரன்று இன்றும் வாழ்கின்ற

மறவரினத்து தேவரின் முன்னவரே

பின்னை யுகத்தில் ஆரியம் இவற்றையும்

தன் கதையாய் மீண்டும் தந்தது நமக்கே.

தண்டகவனம்

தண்டகன் என்றொரு வடபுலத்து மன்னவன்

தசரதராமனுக்கு மிக மிக முன்னவன்

விந்தியத்துக்கு இப்பால் வேங்கடம் வரை

தட்சிண பாதமென்று தடம் போட்டு வந்தவன்

தக்கணம் அவன்பேரால் தண்டகம் ஆனது

இடம் தேடி திரிந்த ஆரிய இருடிகள்

தண்டகவனத்தில் புகுந்து தங்கினார்

வேதம் படித்தார் வேள்விகள் நடத்தினார்

கொலையும் வேள்வியும் கூடாதென்றவரை

வேதத்துக்கு பகைவரென்று வெறுத்தார்

மந்திரங்கள் கொண்டு மாய்க்க முனைந்தார்

இந்திரனைக் கொண்டு எதிர்த்து அழித்தார்

வேள்விக்கு ஒருகுதிரை விரட்டிப் பிடித்து

மகங்கள் நூறு முடித்தவனே மகபதி

வேந்தரில் வேந்தன் இந்திரன் ஆவான்

அவனைவேண்டிய பாட்டுகளும் வேதமாகும்

வேங்கடத்தை பின்வைத்து வடபெண்ணைக்கு அப்பால்

விந்தியம் வரை வாழ்ந்திருந்த வடுகரை

லெமூரியச் சாயல் மிகுந்திருந்ததால்

குரக்கினம் என்றார் குள்ளமனத்தவர்

எழுத்து சொல் பொருள் யாப்பு அணி

துறவு தவம் ஞானம் யோகமென்று

ஒன்பது இலக்கணம் உணர்ந்த புலவனை

மாக்களினத்தில் வகைப்படுத்தி குரக்கென்றார்

முன்னைச் சோழன் ஒருவனுக்கு நெடியதாடை

அனுமச்சாயல் முசுகுந்தன் என்றனர்

கிராங்கனூர் என்னும் கேரளமூதூர்

குரங்கினூர் என்பதின் திரிபென்பார்

முசு என்பதிலிருந்து பிறந்ததே முசிரி

சேரன் கரையிலும் சென்னி வளநாட்டிலும்

இன்னும் பலஊர் இந்தப்பேரில் உண்டு

அனுமனின் அன்னை அஞ்சனைப் பெயரால்

வழங்குவதே சேரத்து அஞ்சைக்களம் என்ப

லெமூரின் வழிமுறைக்கு இவையும் சான்றே.

இராவணலங்கை

தஞ்சைநாட்டு கோடிக்கரைக்கும்

இலங்கை தலை மன்னார் துரைக்கும்

இடையில் கிடந்ததொரு நெடுந்தீவே

தென்னிலங்கை என்ற ராவண லங்கை

திண்டிவனம் தெற்காக ஏழுகல் அளவில்

கீழ் மாவிலங்கை என்றதொரு மூதூர்

சிற்ப வளத்தோடு சிறக்கின்றது இன்றும்

பாலாற்று வெளிமுதல் குசத்தலை பொன்முகலி

வடபெண்ணை வரையுள்ள அருவா வடதலையை

மாவிலங்கை என்பதே வரலாற்று மரபு

மாவிலங்கையின் மறு பதிப்பாக

தெற்கில் அமைந்ததே தென்னிலங்கை

தென் திசையாண்ட தென்னவரின் வழித்தோன்றல்

அரக்கன் எனப்பட்ட இராக்கதிர் கோமான்

அரக்கன் என்றது அருக்கனின் திரிபே

அரும் பொருள் உணராத ஆரியம் பழித்தது

இருளில் ஒளி உமிழும் விழியுடையான்

இராக்கதிர் கோமான் என்பதே அவன் பெருமை

ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தான்

தலமுதலூழியில் வானவர் தருக்கற

புலமகளாளர் புரிநரம்பாயிரம்

வலி பெறத் தொடுத்த வாக்கமை பேரியாழ்

இசைக்கும் திறன்மிகு பெரும் புலவன்

வெள்ளி மலைக் கீழிருந்து விளரி பாடினான்

அழுத முகத்தோன் என்று ஆரியம் பழித்தது

அப்பரும் ஆதிசைவச் சுந்தரரும்

சீர்காழிப்பிள்ளை சிவஞான சம்பந்தரும்

பாட்டுக்குப் பாட்டு பரவசப் பட்டு

பக்தியில் பெரிய னென்று முத்திரை வைத்தார்

இராவணனுக்கு ஈசுவரன் சிறப்புமுண்டு

இழிமகனானால் ஈசுவரத் தகுதி வாய்க்குமோ

கரிய நிறத்தவனை கார்வண்ணன் என்றாங்கு

இராவண்ணத்தவனை இராவணன் என்றார்

அவன் கொடிபறந்த கோட்டைகள் இருபத்தைந்து

அனுமப்படை அணைபோட்டுக் கடந்த கீழக்கரை

கடலோடையே சேதுக் கால்வாய்

அனுமன் கோயில் கொண்ட மணற்குன்று

மகேந்திர மென்ற பெயரில் இன்றுமுண்டு

ராமலிங்கத்தின் ஒருகோடி தனுக்கோடி

மறுகோடி மகேந்திரம் என்பார்

கோடிக் கரைக்கு கொஞ்சம் மேற்காக

கோரையாற்றின் மறுகரையிலுள்ள

ஜாம் பவானின் ஓடையும் சரித்திரச் சான்றே

இலங்கை கடலுன் மாய்ந்து போனதால்

சிலம்பை இசைத்த சேரத்து இளங்கோ

தொலைந்ததைச் சொல்ல தொல்லிலங்கை என்றான்

ஆநிரைக் கவர்தல் மகளிரைச் சிறை எடுத்தல்

பகைவரைப் போருக்கு அழைக்கும் மரபாதலின்

சீதையைச் சிறை எடுத்தான் மற்றபடி

அவள் மானத்துக்குத் தீங்கு இழைத்திலன்

சரித்திரச் சாயலே இதிகாசமாயிற்று

ராவணன் காலத்து வாலியும் வதைக்கப்பட்டான்

ராமனுக்கு அவன் பகை அன்று ஆயினும்

ராவணனுக்கு அவன் நண்பன் என்பதால்

சுக்ரீவன் சார்பில் சூழ்ச்சியாக

மறைந்திருந்து கொன்றான் இலக்கியம் மன்னிக்கவில்லை

நீதியின் குரல் ஏனென்று கேட்கின்றது

தண்டகன் தென்திசை வந்தபோது

கிஷ்கிந்தை அவனுக்கு சிற்றரசானது

அதனால் ராமனுக்கு வாலிமேல் ஆதிக்கம்

தம்பியிருக்கத் தாரத்தை பற்றியது

தவறென்பதற்கே வாலிவதம் என்பார்

இந்த வகையில் எத்தனையோ கதைகள்

தாடகை வதத்திலிருந்து சம்புகன் வதம்வரை

ஆதிவால்மீகி சீதையைத் தேடதென்பால்

அனுமனை ஆற்றுப் படுத்தும் போது

பொதிகையைச் சொல்லி பொன் வேய்ந்த

கபாடபுரத்தின் தொன்மையையும் சொல்லுகின்றார்

ஆதலின் ராமன் காலத்து மூதூர்

தலைசங்க காலக்கடல் துறைப் பட்டினம்

அலவாய் என்பதும் அறிய வருகின்றது

அறுபடை வீட்டில் ஒன்றென்னும்

செந்நிலம் பதியே கபாடபுரம்

வீர மகேந்திரம் என்று சொல்லுவார்

கந்த மாதனம் என்ற கரையாதகுன்று

செந்தில் ஓரத்தில் இன்றும் உண்டு

வள்ளிக் குகை என்று வழங்குகின்றார்

வடபுலத்தில் வந்து கலந்த ஆரியமும்

தென்புலத்து லெமூரிய வழிக்குலமும்

மோதிக் கொண்ட வரலாற்று நிழற்படமே

ராமகதை உள்ளிட்ட தேவாசுரப்போர்கள்

அசுர் என்றாலும் சூரியனென்றே பொருள் சொல்வார்

ஆரியக் கூற்றுப்படி அசுரர் அரக்கர்

வெறுப்புக்குரிய பழிப்புரை யானார்

இராவணன் குலத்துக்கு முன்னவன் புலத்தியன்

அன்னவன் பழந்தமிழ்ச் சித்தர்களில் ஒருவன்

இலங்கை குஞ்சரத்தில் இருக்கை கொண்டிருந்த

அகத்தியனுக்கு பெண் கொடுத்த மைத்துனன்

இந்த உறவில் இராவணன் அகத்தியனுக்குப் பேரன்

பாட்டனும் பேரனும் பாட்டிசைத்தப் போட்டியை

கந்தர்வத்தால் பிணித்த கதையாகத் திரித்தார்

பிரம்ம புத்திரரில் ஒருவனும் புலத்தியன்

பெயர் ஒற்றுமை கொண்டு மரபு வழியை மாற்றினார்

ஆரியத்துக்கு முரண்பட்டு வேள்வியை எதிர்த்த

தென்புலத்து நாகக் குலத் தோன்றலான

இராவண்ணத்தவனுக்கு நிறத்திலே வெளுத்த

ஆரிய புலத்தியன் தாதைவழி ஆவனோ

இதிகாச புராணத்தில் திரிந்தோ திரித்தோ

ஏறிவிட்ட குலமுறைப் படலங்கள்

சரித்திரப் பார்வைக்கு முன் நிற்பதில்லை

அரக்கென்று குரக்கென்று ஆரியம் பழித்தாலும்

தமிழ்க் குலத்துக்கு அவர்கள் தாயாதியரே

வடக்கும் தெற்கும்

தென்னகத்து பேராற்றில் ஒன்று கிருஷ்ணை

அதன்கடல் முகப்பட்டினம் அமராவதி என்ப

அதன் மன்னவரில் ஒருவன் இந்திரன்

கலியரசர் என்று சரித்திரம் சாற்றிய

களப்பிரருக்கு இவனே முதல்வன்

இன்றும் இந்திரகுலம் என்று

பெருமைப்படும் வீர மரபினர் தெற்கிலுண்டு

பாண்டவ குந்தி வனவாசம் வந்தபோது

பார்த்தனைப் பெற்றது இந்த பார்த்திபனுக்கே

வேள்விக்குரிய வேதபுரத்து இந்திரன்

இவனுக்கு பகைவன் அமரவதியைக் கைப்பற்றினான்

ஆரூரில் தன் மகன்மீது தேரூர்ந்த

மனுமுறை கண்ட மன்னவனுக்கு மகன்

பிரமனை சிறைப் பிடித்த வலிய படையாளி

வீரபாகுவின் மருமான் என்ப

ஆரூரில் அரசிருந்த இவனே முசுகுந்தன்

அமராவதிப் பட்டினத்து உரிமை வேந்தன்

இந்திரனுக்காக வேதிய புரந்தரனை

வென்று வாகனமாய்க் கொண்டு வந்த

வரலாறுமுண்டு, வெற்றி கொண்டு மீட்ட

அமராவதியின் பேரால் கரூரும்

ஆகப் பொருனையும் அமராவதி ஆனதுண்டு

குந்தி மைந்தன் என்று கூறும் பார்த்தனும்

தன் தந்தை இந்திரனுக்காக அமராவதி

பட்டினத்தைக் காக்கச் சென்றானென்று

பாரதமும் பரிந்துரைக்கும் சேதியுண்டு

பார்த்தன் தீர்த்த யாத்திரை யாக

தென்னகம் வந்துற்ற போது

நாகைக் கம்பள நாகன் மகளான

உலூபியை மணந்ததை பாரதம் சொல்லும்

பாரதப் போருக்கு களப்பலியான அரவான்

உலூபியின் மணிவயிற்றில் பிறந்த மகனே

நாகையை பாரதமும் உரகபுரி என்றே உரைக்கின்றது

தெற்கில் மணவூர் என்னும் மணிபுரத்தில்

மலையத்துவசன் மகளான அல்லியை

பார்த்தன் மணந்தான் பப்பரவாகன் அவன் மகனே

புலந்திரன் என்றும் புகலுவார் அவனை

பாரதப் போருக்கு ஒரு சேரன் சோறு கொடுத்தான்

மலையத்துவசன் மருகனுக்காக படை கொண்டுபோனான்

படுகளத்தில் பாட்டன் மாண்டதற்கு பகைத்து

ஒரு லட்சத்து நாற்பதாயிரம்

தேராளிகளுடனே படைநடத்தி

புலந்திரன் பாரத புரத்துக்குச் சென்றான்

பாரதம் முடிந்து படுகளமாய்க் கிடந்தது

பாண்டவ கவுரவர் பதினெட்டு

அக்குரோணி படைகளும் மாண்டதற்கு

காரணன் கண்ணன் என்பதறிந்து

துவாரகை மேல் படை நடத்தினான் என்பர்

மலையைக் கொடியுடைய மன்னவனை

மலையத்துவஜன் என்று வழங்கிய படி

கடல் அலையெனக் கொடியசைந்து வர

படை நடத்திய பப்பரவாக னனை

சாகாத்துவஜன் என்று சாற்றினார்

பதிற்றுப்பத்து பாராட்டிய பேராற்றலுடையோன்

வாளில் வலியோன் வள்ளியரில் வள்ளியோன்

தென்புலத்து அக்குரன் வடபுலத்து நூற்றுவர்க்கு

துணை போனான் என்று சங்கத் தமிழுரைக்கும்

வடக்கும் தெற்கும் நெருங்கி நெருங்கி

உறவும் பகையும் கொண்டதற்குச் சான்றுகள்

இதிகாச புராணங்களில் எத்தனையோ உண்டு

பரசுராம பூமி

தனுவில் பெரியவன் தானென்ற உணர்வில்

பரசுராமன் தசரத ராமனை

வழிமறித்து வலிய போருக்கு இழுத்தான்

சீதாராமன் இழுத்த நாணுக்கு இலக்காக

வடபுலத்தில் இனி இருப்பதில்லை என்று

உறுதி கொடுத்தான் உடன் நாடு கடந்தான்

தன்னோடு தன்குலத்து அறுபத்து நான்கு

குடிகளையும் தஞ்சமென்று கொண்டு வந்தான்

சேரன் கரையிருந்த தென்புலத்து மன்னவன்

பரிந்து அறுபத்து நான்குஊர் கொடுத்தான்

அன்று வந்த பரசுராம பரம்பரையே

இன்றுமுள்ள கேரளத்து நம்பூதிரிகளாவர்

துளுவில் தொடங்கி கொல்லம் கடந்து

அதங்கோடுவரை ஆரியமாக வளர்த்தார்.

பரசுராம பூமி ஆயிற்று

இன்னும் பின்னால் மயூரவர்மன்

எண்பத்து நான்கு அவீகப் பார்ப்பனக்

குடிகளை கொண்டு வந்து சேர்த்தான்

அவன் மகன் கங்க வர்மனும்

பலநூறு குடிகளுக்கு வழி வகுத்தான்

மேலைக் கரை ஆரியச் சேரியானது

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்

வெற்றி நடை போடும் பதிற்றுப்பத்து

சாகாதிருக்கும் தமிழ் முதல் நூலென்று

தலை நிமிர்ந்து பேசும் தொல்காப்பியம்

இன்ன பலவற்றைப் பெற்றெடுத்த

சேரன் திருநாடு செந்தமிழ் இயல் பிழந்தது

முன்னை மரபிழந்து மொழியும் வழக்கிழந்து

மெல்ல மெல்லத் திரிந்து மலையாளமானது

தலைச் சங்க நாட்கள்

நிலமகள் தனக்குத் தானே

சுழன்று கொள்வது ஒரு நாள்

நிலவும் நிலமகளை வலம் வருவதே ஒரு திங்கள்

தரைமகளும் கதிரவனைச் சுற்றுவதே ஓராண்டு

காலத்தை அளக்கின்ற கணக்கு இதுவே

முன்னையுகத்துச் சேதிகளை தேதியிட்டு

ஆண்டுக் கணக்கில் அளப்பதற்கு இல்லை

தனித்த சரித்திரமும் செழித்த பண்பாடும்

கொண்டு வளர்ந்த குமரித்திருநாட்டில்

தென்மதுரை மாநகரைத் தலைமை கொண்டு

காய்ச்சின வழுதிமுதல் கடுங் கோன் ஈறாக

நாற்பத்து ஒன்பதுபேர் அரசிருந்தார்

நாவலர் எழுவர் கவியரங்கேறினார்

நாலாயிரத்து நானூற்று நாற்பது யாண்டுகள்

தமிழுக்குப் பேரவை தலைச்சங்கமென்று

நடந்ததென்பார் வியப்பே சிறப்பே

திரிபுரம் எறித்த விரிசடைக் கடவுள்

குன்றம் எறிந்த குமரவேள் என்பார்

தேவரோ-தெய்வப் பெயர்தரித்த புலவரே

தமிழக்கு தாலேலோ பாடினார்

முரஞ்சியூர் முடிநாக ராயர் முதலாக

அகத்தியன் நிதியின் கிழவன் உள்ளிட்ட

ஐநூற்று நாற்பத்து ஒன்பது புலவர்

நாலாயிரத்து நாநூற்று நாற்பத்து

ஒன்பது பாடல் இயற்றினார் என்ப

பரிபாடல் முதுநாரை முதுகுருகு முதலாக

களரி யாவிரை எனக் கணக்கிருந்த நூல்கள்

தமிழ் வழக்கில் இன்றில்லை இருந்ததென்று சாற்றினார்

களவியல் உரைகாரர் கட்டுரைத்த கதை இதுவே

முதற் சங்கத் திருந்த முதும் பெரும்புலவரான

முரஞ்சியூர் முடி நாகராயர்

அலங்குகளைப் புரவி ஐவரொடு சினைஇ

நிலந்தலைக் கொண்ட பொலம் பூந்தும்பை

ஈரைம் பதின்மரும் பொருது களத்தொழிய

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

என எழுதிய புறநாநூற்றைப் பார்த்தால்

பாரத காலத்தில் முடி நாகர் இருந்தவர்

சோறு கொடுத்த உதியன் சேரனும்

சங்கத் தமிழ் நடந்த சம காலத்தவனே

பாரதப் பாழுக்கு பிழைத்து வந்தவன்

பார்த்தனின் பேரன் பரிட்சித்து என்பார்

அவன் காலம் ஏசுகிருஸ்துக்கு முன்னால்

ஆயிரத்து நானூறு ஆண்டுகள் என்பார்

தெற்கில் தலைச்சங்கம் நடந்தபோது

வடக்கில் பாரதம் நடந்தது என்பதே

ஆதாரப்படிபெறப்படும் வரலாற்று உண்மை

சங்கக் கணக்கை கூட்டி எண்ணினால்....

முதற் சங்கத்துக்கு அவர் கொடுத்த புள்ளி

நாலாயிரத்து நானுாற்று நாற்பது யாண்டு

மூவாயிரத்தெழுநூறு யாண்டென்று

இரண்டாம் சங்கத்துக்கு எழுதிவைத்தார்

ஆயிரத்து எண்ணுாற்று ஐம்பது யாண்டு

முன்றாம் சங்கத்துக்கு அவர் செய்த முடிவு

மூன்று கணக்கையும் ஒன்று கூட்டினுல்

பத்தாயிரத்துக்கு ஒரு பத்தே குறைவு

பாரத நாளில் பரீட்சித்து கருவிலிருந்தான்

உதியன் சேரல் கரூரில் அரசிருந்தான்

முடிநாக ராயர் கவியரங்கிருந்தார்

மூவரும் ஒரு காலத்தவர் என்பது முடிவு

நக்கீரன் சொல்லிச் செல்ல வழிவழியே

முசிரி நீல கண்டனார் கொண்டுவந்த

மூன்று சங்கக் கணக்கையும் தொகுத்தால்

இன்றும் சங்கம் தொடர்ந்திருக்க வேண்டும்

நாற்பத் தொன்பது புலவரும் நம்மோடி ருக்கவேண்டும்.

இல்லை என்பதால் அவர்கணக்கு பிழை என்பதற்கில்லை.

கணக்கைப் பற்றியே கணக்கே பிழை

முற்றும் கற்பனை ஒப்புவதற்கில்லே என்பவர் உண்டு

இவர்களுக்குச் சான்றாக இன்னுமொரு கணக்கு

நிலம் தருதிருவின் நெடிய பாண்டியன்

நாடாளுமன்றம் நடந்த நாட்களை

எண்ணிச் சொல்லும் மரபின்றும் உண்டு

சங்கக் கணக்கை சாற்றியதும் அவ்வழியே

தலைச்சங்க பாடல்களின் கூட்டுத்தொகை

நாலாயிரத்து நானூற்று நாற்பதொன்பது

மொழிமுறையும் பொருளுரையும் மரபியலும்

உறைக் கின்றபடி இருக்கின்றவற்றைத் தேடினால்,

தலைசங்க பாட்டென்று எண்ணூறுதேறும்

எஞ்சிய பாடல்கள் தென் மதுரையோடு

சேர்ந்து கடலுள் மாய்ந்தது கொடுமை

போயிற்று போயிற்று என்று புலம்புவதே நிலமை.

சங்கத்தமிழ்

சகரக் கிளவி மொழி முதலாக தென்பதே

நம் முன்னோர் கொண்டிருந்த மொழி மரபு

அந்த இலக்கிய நியதிக்குப் புறம்பாக

காவலரும் பாவலரும் கலந்து தமிழாய்ந்த

பேரவையைச் சங்கமென்று சாற்றியது என்னோ?

தமிழ்க் கூடலுக்குரிய பெயர் மறந்ததோ

தமிழின் துறைவாய் என்பது மாய்ந்ததோ

நல்லாசிரியர் புணர் கூட்டென்ற சொல்லும் இல்லையோ

அவையம் என்ற பழஞ்சொல் வழக்கிழந்ததோ

தமிழ் கெழுகூடல் என்ற தனிப்பெயரும் இன்றில்லை

பொதியில் என்ற புகழும் போயிற்று

மன்றமும் அம்பலமும் மறந்தார் மறந்தார்

வடக்கில் போதி மரத்துப் புத்தன்

ஆரியத்தை எதிர்த்து அவை கூட்டினான்

அந்தக் கூடலுக்கு சங்க மென்று பெயர் சூட்டினான்

அவன் கொள்கைகளைக் கொண்டு சுமந்த

தொண்டர்கள் சங்கம் சரணமென்று சாற்றினார்

தொண்டு வளர்த்து தூதும் தொடர்ந்தபோது

தமிழ்ப் புலத்துக்குச் சங்கம் என்ற பெயரைக் கொண்டுவந்தார்

சமயக் கொள்கையில் அவரைச்சார்ந்த

தண்டமிழ் ஆசான்களும் தங்களையும்

சங்கமென்று சொல்லிக் கொண்டார்

சமயத் தொண்டுக்கு வந்த சமணரும்

தமிழ்த் தொண்டுக்கு தானென்று முன்னின்றார்

தங்கள் அமைப்புக்கும் சங்கமென்றே பேர்சொன்னார்

சமயப் பேரவைக்கு வாய்த்த பெயரே

தமிழ்ப் பேரவைக்கும் வலிந்து வாய்த்தது

வரலாற்றுத்தடத்தில் வந்த தடு மாற்றங்களில்

சிதறுண்ட தமிழ்ச் செல்வங்களைத் திரட்டி

வகுத்ததும் தொகுத்ததும் சங்கம் வந்தபின்னே

ஆதலின் முன்னம் தமிழ் நடந்த நிலைக்களத்தை

முழக்க மென்ற பொருளில் சங்கமென்றார்

முன்னைத் தமிழ் முத்தமிழ் ஆனது

மூன்று தமிழும் சங்கத்தமிழ் ஆனது

கடலோடுதல் விலக்கான ஆரியர்க்கு

கடல் படு பொருளான சங்கும் விலக்கே

ஆரியத்தின் அடிப்படை மொழிகளில்

சங்கம் என்ற சொல்லும் அது

சாற்றும் பொருளும் இல்லை இல்லை

ஆதலின் சங்கம் என்பது

தமிழ் இல்லை என்பதற்கும் இல்லை.

செங்கோன் தரைச் செலவு

முதலூழியில் மூழ்காத தனித் திட்டொன்று

முதலூழித்தனியூர் என்ற பெயரோடிருந்தது

ஆங்கே சேந்தன் என்றொரு புலவன்

செங்கோன் தரைசெலவொன்று எழுதினான்

முன்னை மொழிகளில் பயண நூல்களில்

முதலது அதுவே என்பதும் பெருமையே

செங்கோன் ஆனேற்றுக் கொடியுடைய அடலேறு

அவனொரு சூரிய குலத்தோன்றல்

அவன் பெரும்படை வடபுலத்தின் மேல் நடந்தது

என்பதற்கு மேல் எதுவும் தெரிவதில்லை

தொல்லிலங்கையோடு தொடர்ந்திருந்த

இடைகழி நாட்டில் பெருவள நல்லூர் ஒன்று

அவனரசிருந்த மூதூர் அதுவே

முத்தூறும் பேராறும் மணிமலையும் அவன் நாட்டுடைத்து

பெருநூலும் இயல்நூலும் அவன் பெற்றிருந்த தமிழ்ச்செல்வம்

செங்கோடன் நெடுந்துறைவன் சக்கரக்கோ அவைப்புலவர்

என்றின்ன குறிப்போடு இருந்தமிழும் பழந்தீவும்

நெடுங்கடலுள் மாய்ந்ததென்றே முணுமுணுப்பார்

பின்னைப் புலவர்கள் பெருவெள்ளத்தைப் பேச

முன்னை அடிவைத்த முதல் நூல் அதுவே.

தலைச்சங்கப் பாடல்கள்

பஃறுளி ஆறு கடல் படுமுன்னே

முது குடுமிப் பெருவழுதி

முன்னீர் விழவின் நெடியோன்

நன்னீர் பறுளி மணலினும் பலவே என

வாழ்த்தும் நெட்டிமையார் பாட்டு

ஒரு தலைச்சங்கப் பாடல் ஆகும்

நெட்டிமை நெற்றிமையின் சொற்சரிவே

மூன்றாம் சங்கத்து முதுபெரும் புலவன்

மதுரைக் கணக்காயன் மாடன் நக்கீரன்

எதிர்த்து வழக்க்குரைத்த நெற்றிக் கண்ணனும்

நெட்டிமையார் வழித்தோன்றலே

தொண்டு என்பது ஒன்பதாக வழங்கிய வழக்கு

தலைசங்க நாட்கணக்கு ஆதலின்

தொடித்திரிவன்ன தொண்டு படுதிவவென

ஆளும் மலைபடுகடாம் ஒரு தலைச்சங்க நூலே

ஊன் பொதி பசுங்குடையாரின் பாட்டொன்று

சீதை சிறைபோன வழித்தடத்தில்

சிந்திய நகைகளை குரக்கின மாதர்

அணியத் தெரியாது அணிந்தாரென்று

அகச் சான்றாக உதாரணம் காட்டும்

இதுவும் ராமன் காலத்து பாட்டாதலின்

தலைசங்க வரிசையில் இடம் பெறுவதே,

ராம கதை எழுதிய வலிய புலவன்

வான்மீகியின் பேரால் புறப்பாட்டுண்டு

மறுபடியும் சீதை வனவாசம் வந்தபோது

வாழ்ந்திருந்த சிற்றூறே குசலவமேடு

கோயிலும் கோட்பாடும் அதனை வலியுறுத்தும்

சென்னை பெருநகருக்குப் புற நகராக

கூவத்துக் கரையில் இன்றுமுண்டு

வால்மீகியின் பேரால் திருவான்மியூர் என

பேரூர் ஒன்றும் சென்னைப் புறநகரே

வால்மீகி வாழ்ந்ததும் வலியகாவியம் வரைந்ததும்

தென் புலத்திலிருந்து என்பதே தெளிவாகும்

அவன் புறப்பாட்டு வலியுறுத்துவது நிலையாமை

காஞ்சித் தினை என்பார் தலை சங்கமரமே

ஒரு தமிழ்க்கவி வேற்று மொழியில்

ராமகாவியம் எழுதினான் என்பதோ எனின்

ஒரு மேல்நாட்டுத் துறவி வீரமாமுனி

செந்தமிழ்த் தேம்பாவனி எழுதியபடிக்கே

ராமகாவியம் பால. அயோத்ய,

ஆரண்ய, கிஷ்கிந்த, சுந்தரயுத்தம்

என்று காண்டங்கள் ஆறு கொண்டது

அவற்றில் விந்தியத்துத் தெற்கில் நிகழ்ந்தனவே

ஆரண்ய கிஷ்கிந்த சுந்தர யுத்த காண்டங்கள்

கதையின் பெரும்பகுதி நிகழ்ந்த தென்புலத்தில்

வாழ்ந்தவன் வால்மீகி என்பதும்

புறநானூற்றில் அவன் பாட்டுண்டு என்பதும்

அவனொரு தென்னவன் என்பதற்குச் சான்றே

மற்றும் ஒருப் பாட்டு மார்க்கண்டன் எழுத்து

மறலி இவனுக்காக உதைபட்டது கடவூரில்

கோயிலும் வழிபாடும் வரலாறும் விழாவும்

இன்றும் திருக்கடவூரில் நடைமுறையில் உண்டு

மார்க்காண்டன் நுதலிய பொருளும் நூற்பாவும்

தொன்மையிலும் தொன்மை

புராண நாயகரில் ஒருவனும் தமிழ்ப்புலவன்

என்பது கொண்டு இவன் பாட்டும் தலைச்சங்கமே

கௌதமனார் என்றதொரு பழந்தமிழ் வாணன்

பாரத தருமபுத்திரனை பாடினான் என்பர்

கௌதமன் என்றதும் இந்திரன் அகலிகை

நினைவுக்கு வருவார் நினைப்பதற்கு இல்லை

அவன் ராமன் காலத்து முனிவன்

இவர் பாரத காலத்துப் புலவர்

பாரதத்து மன்னவனை பாண்டியத்துப் புலவன்

பாடியது எவ்வாறு என்பார்க்குச் சொல்வேன்

மலையத்துவஜ பாண்டியன் மருமகனுக்காக

படைத்துணை கொண்டு சென்ற போது

உடன் சென்ற புலவன் கௌதமன்

போர்த் தலைவனான பாண்டவர் குலத்தலைவனை

பாட்டுடைத் தலைவனாய்க் கொண்டு பாடினான்

வடக்கின் இதிகாச காலம் தெற்கின்

தலைசங்க நாளென்பதால் இதுவும் முதற்சங்கமே

களவாக உடன் போகி கற்பாக மீண்டதற்கு

ஊரலர் ஓய்ந்ததை உவமைப் படுத்த

வெல்போர் இராமன் அருமறைக்கு

ஒலிய விழ்ந்த பல்வீழ் ஆலமென்ற

அகப்பாட்டும் ஒருதலைச்சங்கப் பாட்டே

அகத்தும் புறத்தும் நுழைந்து வந்தால்

முன்னைப் பாட்டுகளில் ஒரு எண்ணூறு

தலைசங்க வரலாற்றில் இடம் கொள்ளும்

சரித்திரக் கணக்கு

ஈழத்து வரலாற்றுக் குலமுறையைக் கிளத்துகின்ற

மகா வம்சம் தீப வம்சங்கள்

தென்புலத்தை கடல்வெள்ளம் மூன்றுமுறை

விழுங்கிய பெருங் கொடுமையைச் சொல்லும்

முதலாவது கிருஸ்துவுக்கு முன்னால்

இரண்டாயிரத்து முன்னூற்று எண்பத்தேழு

இதுவே எபிரேயர் சொல்லி வைத்த

நோவா காலத்து நாற்பது நாள் பெருமழை

உலகை அழித்த பெருவெள்ள மாகும்

தென்புலத்தில் எஞ்சிய பகுதியே

களவியலுரை கட்டுரைத்த நாற்பத்தொன்பது நாடுகள்

இடைகழி நாடும் தொல்லிலங்கையும் புறத்தீவுகளாயின

குமரிக்கோட்டுக்கு வடக்கில் தொடர்ந்த

மேலைச் சாரலே கொல்லங்கரை

புதியதொரு தலைநகர் தென் மதுரையானது

இந்த வரலாற்றின் தொடக்கநாள் கி. மு.

இரண்டாயிரத்து முன்னூற்று எண்பத்து ஏழு

தலைசங்கமும் தழைத்த தமிழும்

தமிழனின் செழித்த வாழ்வும்

தென்பாலி உள்ளிட்ட தென்மதுரை அரசும்

மீன்டும் வெள்ளத்துக்கு விருந்தானது.

இந்த வீழ்ச்சியையே சிலம்பின் செல்வன்

பஃறுளி ஆறும் பன்மலை அடுக்கமும்

குமரிக் கோடும் கொடுங்கடல் கொண்டதென்றார்

ஈழத்துக் கணக்குப்படி இது நிகழ்ந்தது

கிருஸ்துக்கு முன்னால் ஐநூற்று நான்கில்

ஆக தலைச்சங்க நாட்களென்னும்

தமிழுக்கு மூத்த வரலாற்றுக் காலம்

ஆயிரத்து எண்ணூற்று எண்பத்து மூன்று

ஆண்டுகளே இந்த நெடிய காலத்தில்

எண்பத்து ஒன்பதின்மர் அரசு கட்டிலேறினார்

கடைசிக் காவலன் கடுங்கோன் ஆவான்

வெள்ளத்தில் பிரிந்து வேறான பகுதி

ஈழத் தீவான தெங்க நாட்டுத்திட்டே

சேரத்தீ வென்றும் சொல்லுவார்

நெடு நிலம் கடல்படு முன்னே தென்பொருணை

முக்காணி கடந்து கொற்கையை ஊடுறுவி

நாகநன்னாடு எனும் ஈழத்துப் பாய்ந்து

வளம் கொழித்தது, கொண்டு இலங்கையை

சீனர் தாம்பிர பரணிகே என்றார்

பனைநாட்டுப் பகுதியே செந்தில் ஓரம்

சாலமன் கலங்கள் வந்து நின்ற

உவரித் துறையும் இந்த ஓரமே

வடக்கில் சிந்து அழிந்தபின் இந்து வெளிக்குள்

ஆரியம் புகுந்த நாட்களும் அதுவே.

பின்னுரை:-

தெற்கின் தலைச்சங்க துவக்க நாட்களே

வடக்கில் ஆரிய வேத காலம்

முன்னைப் பழங்குடிகளை வென்று விரட்டி

இந்து வெளியில் ஆரியம் இடம் கொள்ள

இந்திர ருத்திர பிரமரை வேண்டினார்

அதனை தோத்திர காலமென்று சொன்னார்

மழைக்கும் மகப் பேற்றுக்கும்

மாற்றாரை வதைப் பதற்கும் ஆக

வேள்விகள் நடத்தினார் மந்திரகாலம்!

ராமகதைக்கு நாட்கள் அதுவே

ராம அனுமனுக்கு பாரத பீமன்

தந்தை வழியில் தம்பியாவான்

சௌகந்தி மலர் பறிக்க பீமன்

இமயத்துக்குச் சென்ற போது

வழியில் அனுமன் மறித்தான் என்பது கதை

மற்றும் பார்த்தன் தென்திசை வந்தபோது

சேதுக்கரையில் அனுமனை சந்தித்த சேதியுமுண்டு

பாரதத்துக்கு காரணனான கண்ணன்

சியமந்தக மணிக்காக ஜாம்பவான் என்னும்

முதுபெருங் கிழவனை மோதினான் என்பது பாகவதம்

ஆக ராமர் காலத்து நாயகரான

முதிய ஜாம்பவான், அனுமனை

பாரத தீரர்கள் பார்த்தனும் கண்ணனும்

சந்தித்தாரென்பது இதிகாசம்

மேலும் சமணத்து சரித்திர நாயகன்

இருபதாம் தீர்த்தங்கரர் முனிசுவர்த்தர்

இராமன் காலத்தவரென்ப

இருபத்திரண்டாம் தீர்த்தங்கரர் நேமி நாதர்

இதன் படிக்கு கிடைக்கின்ற இடைவெளி

இரண்டே தீர்த்தங்கரர் என்பதால்

ராமன் கண்ணன் இருவேறு யுகத்தவரல்ல

ஒரு காலத்து மூத்தோர் இளையவரே

கண்ணனுக்கும் சமணத்தில் வசுதேவ வரிசையுண்டு

ஒரே நூற்றாண்டில் உள்ளான இடைவெளியே

வியாசன் இருந்ததும் இதே நூற்றாண்டு

மூன்றான வேதத்தை நான்காக வகுத்தான்

பாரதம் நடந்த பதினான்காம் நூற்றாண்டில்

தென்புலத்தில் சேர சோழ பாண்டியர்

செழித்திருந்ததே இலக்கிய மாகும்.

தென்னிலங்கை வேந்தன் ராவணன் மாண்டதும்

அதே நூற்றாண்டில் கொஞ்சம் முற்படவே

தமிழ் நான்மறையின் வழிமுறையில்

வேத விளக்கம் செய்து உபநிடத மென்றார்

தென்புலத்து அந்தண மறையாளர் தொகுத்த

பிரமாணங்கள் பலப்பல வேதத்திலுண்டு

ஆரியர் கொண்டுவந்த தோத்திரத் தொகுப்பும்

இங்கே கொண்டு கூட்டி எழுதிச் சேர்த்த

புதிய பகுதிகளும் திரண்டதே வேதம்

ஆழ்ந்த நுண்ணறிவும் அகன்ற நூலறிவும்

கொண்ட சான்றோர்கள் கருத்து இதுவே

குமரியாறும் குமுறும் கடலும்

கூறும் உண்மைகளைக் கூறினேன்

தெற்கில் தமிழ் நிலத்தை கடலலை மாய்த்தது

வடக்கில் தமிழ்க் குலத்தை ஆரியக்கலை மாய்த்தது

இடையில் திரிந்து போனவர் போக

தண்பொழில் வரைப்பில் தலை நிமிர்ந்து

தனக்கென்று வரன்முறை வகுத்துக் கொண்ட

தலை முறையே தலைச்சங்கப் பரம்பரை

முன்னைமொழியும் மரபும் இன்னும்

கட்டுக் குலையாமல் கன்னித் தன்மையுடன்

வருகின்ற வரலாற்றுப் பழங்குடிக்கு

இதிகாச புராண இலக்கியங்களிலிருந்து

கற்பனை வர்ணனைகளை களைந்துவிட்டு

தெரியவந்த உண்மைகளைத் தொகுத்து

கண்டதும் கேட்டதும் கற்றதும் கலந்து

என் கருத்துக்கு சரியன்று பட்டபடிக்கு

தலைச்சங்க நாட்களைத் தந்திருக்கின்றேன்

என் தாய் திருநாட்டிக்கும் தமிழுக்கும் வணக்கம்

எனக்கு முன்னம் எழுதினார்க்கு நன்றி

இன்னும் பின்னால் எழுதுவார்க்கு வாழ்த்து

அவர்கள் சிந்தனையைத் தூண்டுவதற்கு

ஏ. கே. வேலன் எழுத்து ஒரு கைவிளக்கு

★★★

அச்சில்

சங்ககாலம் 2-ம் பகுதி

இராவணன்

சிலம்பு

சரிந்த கோட்டை

கங்கைக்கு அப்பால்

காவிரிக் கரையினிலே

மற்றும்

சங்ககாலம்

------------

பிழை திருத்தம்

பக்கம் பிழை திருத்தம்

12 புளர் புனர்

16 தமிழக்கு தமிழுக்கு

16 மொழிந்து மொழிந்து

21 கநை கதை

22 இலங்கைக் இலங்கைத்

23 சாம்போதி காம்போதி

27 தூற்றம் தூற்றும்

33 கன்றை கன்றைத்

35 லெமூரியர் லெமூரியா

35 மூழ்சியப் மூழ்கிய

36 தாயரசன தாயரசை

36 மொஹஞ்தரோ மொஹஞ்சதரோ

36 சரித்திர சரித்திரக்

37 கூட்டங்கள் கூடங்கள்

38 எமுதாக் எழுதாக்

41 நிமிந்த நிமிர்ந்த

47 கடலுன் கடலுள்

57 பற்றியே பற்றிய

59 நாற்பதொன்பது நாற்பத்தொன்பது

60 முதலாக முதலாகா

64 தினை திணை

64 மரமே மரபே

64 தேம்பாவனி தேம்பாவணி

67 மீன்டும் மீண்டும்

69 பாாத பாரத